நகைக்கடன் முறைகேடு தொடர்பாக தருமபுரியில் கூட்டுறவு சங்க தலைவர், செயலர் உள்பட 4 பேர் கைது

தருமபுரி: நகைக்கடன் முறைகேடு தொடர்பாக கீழ்மொரப்பூர் முதன்மை வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தலைவர், செயலர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் பார்த்திபன், செயலர் பொன்னுசாமி, எழுத்தர்கள் சிவலிங்கம், கருணாநிதி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கூட்டுறவு சங்கத்தில் ரூ.43,31,472 முறைகேடு செய்ததாக துணை பதிவாளர் அளித்த புகாரின் பேரில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தலைவர், செயலர் மற்றும் எழுத்தர் ஒருவரின் சொத்து ரூ.1.80 கோடி மதிப்பீட்டில் ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நகைக்கடன்கள் தள்ளுபடியாகும் என்ற எதிர்பார்ப்பில் முறைகேடுகள் நடந்திருப்பது அம்பலமாகியிருக்கிறது. வறியோரிலும் வறியோருக்கு வழங்கப்படும் குடும்ப அட்டைகளை தவறாக பயன்படுத்தி லட்சக்கணக்கில் நகைக் கடன்கள் பெற்றிருப்பதும் தெரிய வந்திருக்கிறது. போலி நகைகளை அடமானமாக வைத்து நகைக் கடன்களை பெற்றிருப்பதாகவும், நகைகளை அடமானம் பெறாமல், நகைகளை அடமானம் வைத்துள்ளதாக ஏமாற்றி நகைக்கடன்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் தற்போது அதிர்ச்சித் தகவல்கள் வெளியான வண்ணம் இருக்கிறது.

சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து பலரும் இதுதொடர்பாக முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பது தற்போது தெரியவந்துள்ளது. ஏற்கெனவே பயிர்க்கடன் தள்ளுபடியின்போது நடைபெற்ற முறைகேடுகள் அம்பலமான நிலையில் நகைக்கடன் தள்ளுபடியிலும் அம்பலமாகியுள்ளது.

Related Stories: