பேரவைக்கு அப்பாவு அதிகாரம் கேட்டிருப்பது மக்களின் குரலாக ஒலிக்கிறது: இந்திய கம்யூ. வரவேற்பு

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் நேற்று  வெளியிட்ட அறிக்கை: சிம்லாவில் நடந்த சட்டமன்றப் பேரவை தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட தமிழ்நாடு சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு முன்வைத்த கருத்துகளும் முன் மொழிவுகளும் மக்களாட்சிக்கு வலுச் சேர்க்கும் திசைவழியில் அமைந்துள்ளன.  “ஒரு சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பும் சட்ட மசோதா அல்லது தீர்மானம் எதுவானாலும் ஆளுநர் தனது ஒப்புதலை அல்லது மறுப்பை தெரிவிக்க கால வரம்பு நிர்ணயிக்க வேண்டும். இதேபோல் குடியரசு தலைவருக்கு அனுப்பப்படும் மசோதாக்கள் மற்றும் தீர்மானங்கள் மீது அவர் முடிவு எடுக்கவும் கால வரம்பு நிர்ணயிக்க வேண்டும்.

ஒருவேளை ஒப்புதல் தர இயலாது என்று முடிவு செய்தால் அதற்கான காரணங்களை முழுமையாக விளக்க வேண்டும்’’ என அப்பாவு வலியுறுத்தியுள்ளார். பேரவை தலைவர் யாருடைய உரிமைகளிலும் தலையிடாமல் பேரவைக்கு அதிகாரம் கேட்டிருப்பது மக்களின் குரலாக ஒலிக்கிறது.  தமிழ்நாடு சட்டப் பேரவை தலைவரின் கருத்துகளையும், முன்மொழிவுகளையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வரவேற்கிறது. ஒன்றிய அரசும், குடியரசு தலைவரும் தமிழ்நாட்டின் கோரிக்கையை ஏற்று, சட்டங்களில் உரிய, பொருத்தமான திருத்தங்களை செய்ய வேண்டும்.

Related Stories: