தொடக்க, உயர்நிலைப்பள்ளி எச்எம்களுக்கிடையே ஈகோ மோதல் ஒழுகும் மழைநீரால் வராண்டா வகுப்பறையானது-மாநகராட்சி பள்ளியை பெற்றோர் முற்றுகை

திருச்சி : திருச்சி எடமலைப்பட்டி புதூரில் மாநகராட்சி தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி ஒரே வளாகத்தில் உள்ளது. இப்பள்ளிகளில் 1,400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். தொடர் மழையால் தொடக்கப்பள்ளி வகுப்பறை சேதமடைந்திருந்தது. குறிப்பாக 3ம் வகுப்பு வரை உள்ள வகுப்பறைகளின் மேற்கூரைகள் ஒழுகின. இதனால் பள்ளி வராண்டாவில் வைத்து மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டது. இதனால் மழைச்சாரல் பட்டு மாணவ, மாணவியர் நனைந்துகொண்டே பாடம் கவனிக்கும் பரிதாப சூழல் ஏற்பட்டது.

இது தொடர்பாக மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் நேற்றும் வராண்டாவில் அமர வைத்து பாடம் நடத்தி உள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் மார்க்சிஸ்ட் கம்யூ., பகுதி செயலாளர் வேலுசாமி, செயற்குழு உறுப்பினர் வெற்றிச்செல்வன் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பள்ளி வளாகம் முன் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியருக்கும், உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கும் இடையே ஏற்பட்ட ஈகோ பிரச்னையால், தொடக்கப்பள்ளி மாணவர்கள் அமர்வதற்கு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் இடம் தர மறுத்ததால், மாணவர்கள் வராண்டாவில் அமர வைத்தது தெரியவந்தது. இதனால் ஆவேசமடைந்த பெற்றோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த திருச்சி மேற்கு தாசில்தார் ரமேஷ், கன்டோன்மென்ட் ஏசி அஜய்தங்கம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், கல்வித்துறை அதிகாரிகள் நேரில் சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

வகுப்பறைகள் சரி செய்யப்படும். அதுவரை உயர்நிலைப்பள்ளியில் உள்ள ஸ்மார்ட் கிளாசை தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு பயன்படுத்திக்கொள்வது என கூறியதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: