பூதலூர் ஆர்த்தி நகரில் தேங்கி கிடக்கும் மழைநீரால் நோய் தொற்று அபாயம்-நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

வல்லம் : பூதலூர் ஆர்த்தி நகரில் தேங்கி கிடக்கும் மழைநீர் வடிய வழியில்லாமல் குளம் போல் உள்ளது. இதிலிருந்து துர்நாற்றம் வீசுவதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே உடனடி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.தஞ்சை மாவட்டம் பூதலூர் பழைய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பின்புறம் அமைந்துள்ளது ஆர்த்தி நகர். இங்கு சுமார் 50க்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன. பூதலூர் பகுதியில் பெய்த கனமழையால் ஆர்த்தி நகர் பகுதியில் மழைநீர் தேங்கி நின்று வடிய வழியின்றி உள்ளது.

இப்பகுதியில் குடியிருப்பவர்கள் மளிகை, காய்கறி உட்பட அத்தியாவசிய தேவைகளுக்கு ரயிலடி பகுதிக்குதான் வரவேண்டும். தேங்கி நிற்கும் மழைநீரில் நடந்து செல்லும் நிலைதான் உள்ளது. குறிப்பாக வயதானவர்கள் தடுமாறியபடியே செல்கின்றனர். மேலும் தேங்கி நிற்கும் தண்ணீரில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகிறது. இதனால் பல தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இப்பகுதி குடியிருப்பு வாசிகள் அச்சத்துடன் தெரிவித்தனர்.

இதற்கிடையில் தேங்கி நிற்கும் தண்ணீரில் புழுக்கள் உற்பத்தியாகி உள்ளது. மிகுந்த துர்நாற்றமும் வீசுகிறது. எப்போது மழை பெய்தாலும் இப்பகுதியில் மழை நீர் தேங்கி நிற்பது வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது. குழந்தைகள், வயதானவர்கள் என்று அனைவரும் இதனால் பாதிக்கப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: