விவசாய கூலியாட்கள் தட்டுப்பாடு நெல்லையில் நாற்று நடும் பணியில் களமிறங்கிய வடமாநில பெண்கள்

நெல்லை : தென் மாவட்டங்களில் பிசான சாகுபடி துவங்கியுள்ள நிலையில் விவசாய பணிகளுக்கு ஆட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் நெல்லையில் வடமாநில பெண்கள் நாற்றுநடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் சமீபத்தில் பெய்த வடகிழக்கு பருவமழையின் காரணமாக அணைகள், ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட முக்கிய நீர்நிலைகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதேபோல் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களிலும் அணைகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. பிசான சாகுபடி பணிகளுக்காக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் விவசாயிகள் நிலத்தை பண்படுத்துதல், விதைத்தல், நாற்று நடுதல் உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் விவசாய பணிகளுக்கு ஆட்கள் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கிராமங்களில் நூறு நாள் வேலை திட்டப்பணிகளுக்கு செல்ல விரும்பும் பலர் சமீபகாலமாக இதுபோன்ற விவசாயப் பணிகளுக்கு செல்வதை விரும்புவதில்லை. மேலும் எந்திரமயமாதல் உள்ளிட்ட தொழில்நுட்ப சாதனங்களால் பலருக்கு வேலையில்லாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால் உள்ளூரில் விவசாய பணிகளுக்கு வேலையாட்கள் கிடைப்பது சிரமமாக உள்ளது.

 நெல்லை மாவட்டத்தில் நாற்று நடுதல் பணிக்கு தினசரி சம்பளமாக 300 ரூபாய் வழங்கப்படுவதோடு, வருகிற வேலையாட்களுக்கு டீ, வடை மற்றும் வெளியூர்களில் இருந்து வருபவர்களுக்கு போக்குவரத்து செலவுகளுக்கும் சேர்த்து பணம் கொடுக்க வேண்டியுள்ளது. அப்படியே கூடுதல் சம்பளம் கொடுத்தாலும் உள்ளூரில் வேலையாட்கள் கிடைப்பது சிரமாக உள்ளது. இதனால் சீவலப்பேரி அருகே உள்ள கீழப்பாட்டம் பகுதியில் கொல்கத்தாவைச் சேர்ந்த பெண்கள் பலர் நாற்றுநடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

இவர்கள் உள்ளூர்வாசிகளைப் போல திறம்பட விவசாயப் பணிகளை செய்வதால் அந்த பணிகளுக்கு வடமாநில தொழிலாளர்களை பலரும் விரும்பி தேடிச்செல்கின்றனர்.  

வடமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு குடும்பத்தோடு வந்துள்ள பல தொழிலாளர்கள் கட்டிட பணிகள், சாலை, செங்கல்சூளை உள்பட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் விவசாயப் பணிகளுக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள இடங்களில் வடமாநில பெண் தொழிலாளர்கள் அதிகளவில் விவசாய பணியிலும் ஈடுபடுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: