வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் காய்கறிகள் விலை கடும் உயர்வு: தக்காளி ரூ.100க்கு விற்பனை

வேலூர்: வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் காய்கறிகள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. வரத்து குறைந்ததால் தக்காளி கிலோ ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது. வேலூர் நேதாஜி மார்க்கெட்டிற்கு ஆந்திரா, கர்நாடகா, மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் ஓசூர், ராயக்கோட்டை, கிருஷ்ணகிரி உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து வாகனங்களில் வெங்காயம், தக்காளி, பீன்ஸ் உள்பட பல்வேறு வகையான காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.

அதேபோன்று வேலூரை சுற்றியுள்ள பகுதிகளில் விளையும் காய்கறிகள், கீரை வகைகள் மொத்தம் மற்றும் சில்லரை விலையில் மார்க்கெட்டிற்கு விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இந்நிலையில் வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதனால் விவசாய பயிர்கள் மழை வெள்ளத்தில் மூழ்கி சேதமாகியுள்ளது. இதனால் காய்கறி வரத்து வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி வேலூர் நேதாஜி மார்க்கெட்டிற்கு குறைந்தளவு காய்கறிகள் மட்டுமே கடந்த வாரம் முதல் வருகிறது. இதனால் அனைத்து காய்கறிகளின் விலையும் கிடு, கிடுவென உயர்ந்துள்ளது. மழையால் காய்கறிகள் வரத்து மிகவும் குறைந்துகொண்டே இருப்பதால் இவற்றின் விலை மேலும் அதிகரிக்கும் என தெரிகிறது. இன்று தக்காளி, கத்தரிக்காய் சில்லரை விலையில் ஒரு கிலோ ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது. பெரிய வெங்காயம் ரூ.40க்கும், கேரட் ரூ.40க்கும், பீன்ஸ், பீட்ரூட் ரூ.30க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதைத்தவிர மற்ற அனைத்து காய்கறிகளும் ரூ.10 முதல் 20 வரை கூடுதலாக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர் விலை உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மார்க்கெட்டிற்கு காய்கறிகள் குறைந்த அளவு  மட்டுமே விற்பனைக்கு வருவதால் சிறிது நேரத்தில் விற்று தீர்த்துவிடுகிறது. காலை 9 மணிக்கு பிறகு பல்வேறு கடைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. மழை பாதிப்பு குறைந்து காய்கறிகள் போதுமான அளவு வந்தால் மட்டுமே விலை குறையும். என்றாலும் இன்னும் சில வாரங்கள் இதே நிலை நீடிக்கும் என்று வியாபாரிகள் கூறுகின்றனர்.

Related Stories: