கடுமையாக உயரும் நூல் விலை!: ஒன்றிய அரசை கண்டித்து திருப்பூரில் நவ.26ல் முழு அடைப்பு போராட்டம்..!!

திருப்பூர்: அதிகரித்து வரும் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த ஒன்றிய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வருகின்றன 26ம் தேதி திருப்பூரில் அனைத்து தொழில் அமைப்புகள், தொழில் சங்கங்கள், அரசியல் அமைப்புகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கம் சார்பில் நடந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் பின்னலாடை விசைத்தறி மற்றும் அதனை சார்ந்த ஆயிரக்கணக்கான நிறுவனங்களும், லட்சக்கணக்கான தொழிலாளர்களும் செயல்பட்டு வருகின்றனர். சில நாட்களாகவே நூல் விலை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதுவரை வரலாற்றில் இல்லாத வகையில் ஒரேநாளில் 50 ரூபாய் வரை விலை உயர்ந்து தற்போது நூல் விலையானது கிலோவிற்கு 300 முதல் 350 ரூபாய் வரை விற்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இப்பிரச்சனையை ஒன்றிய, மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டுசெல்லும் விதமாக திருப்பூர் காங்கேயம் சாலையில் தொழிலமைப்புகள், திமுக, காங்கிரஸ், மதிமுக, அரசியல் கட்சிகள், சி.ஐ.டி.யூ., எ.ஐ.டி.யூ.சி. தொழிற் சங்கங்கள், வணிகர் அமைப்புகள், திரையரங்கு உரிமையாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கலந்துக்கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் நூல் விலையேற்றத்தை அரசுக்கு கொண்டு செல்லும் வகையிலும், பருத்தி பதுக்கலை கண்டறிந்து உள்நாட்டு உற்பத்திக்கு பயன்படுத்த வழிவகை செய்ய நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி நவம்பர் 26ம் தேதி திருப்பூர் மாவட்டம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் அன்றைய தினம் கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அமைப்புகள் தெரிவித்திருக்கின்றனர்.

Related Stories: