கோவை வ.உ.சி. மைதானத்தில் புதிய திட்ட பணிகளுக்கு முதல்வர் இன்று அடிக்கல் நாட்டுகிறார்: திருப்பூரில் நடக்கும் விழாவிலும் பங்கேற்பு

கோவை: கோவையில் இன்று நடக்கும் அரசு  நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். இதற்காக அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை கோவை செல்கிறார். கோவை வ.உ.சி. மைதானத்தில் காலை 11 மணிக்கு நடைபெறவுள்ள அரசு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கியும் பேசுகிறார். தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், பொதுப்பணித் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வேளாண்மை பொறியியல் துறை, கூட்டுறவுத் துறை, பள்ளிக்கல்வித் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆகிய துறைகளின் சார்பில் நிறைவேற்றப்பட்டுள்ள பல்வேறு திட்டப் பணிகளை முதலமைச்சர் திறந்து வைக்கவுள்ளார்.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, பொதுப்பணித் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், கூட்டுறவு துறை ஆகிய துறைகளின் சார்பில் பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டவுள்ளார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், கூட்டுறவுத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, வனத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் வழங்க உள்ளார்.

கோவையில் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் திருப்பூரில் நடக்கும் அரசு விழாவில் பங்கேற்கிறார். திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் நடக்கும் அரசு விழாவில் கலந்து கொண்டு அரசு கட்டிடங்களை திறந்து வைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பயனாளிகளுக்கு, அரசு நல உதவிகளை வழங்க உள்ளார். இதன்பிறகு கோவையில் அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். நாளை காலை 11 மணிக்கு கொடிசியா அரங்கில் நடக்கும் முன்னணி நிறுவனங்களின் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். முதல்வர் வருகையை முன்னிட்டு கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: