கொடைக்கானல் அருகே தொடர்மழை பூமிக்குள் புதைந்த குடிநீர் கிணறு: பொதுமக்கள் அலறி ஓட்டம்

கொடைக்கானல்: தொடர்மழை காரணமாக, கொடைக்கானல் அருகே குடிநீர் கிணறு திடீரென பூமிக்குள் புதைந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கே.சி.பட்டி அரசு துவக்கப்பள்ளி அருகே குடிநீர் தேவைக்காக 10 ஆண்டுகளுக்கு முன்பு 10 அடி அகலம், 70 அடி ஆழத்தில் கிணறு அமைக்கப்பட்டது. இப்பகுதியில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து கனமழை பெய்ததால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.

நேற்று முன்தினம் மதியம் அரசு துவக்கப்பள்ளி அருகே இருந்த குடிநீர் கிணறு, திடீரென சுற்றுச்சுவருடன் 10 அடி ஆழத்தில் பூமிக்குள் புதைந்தது. இதனால் ஏற்பட்ட அதிர்வில் கிணற்றிலிருந்த தண்ணீர் மிக உயரமாக எழும்பியது. இதனை பார்த்து அச்சமடைந்த அப்பகுதி மக்கள், வீடுகளை விட்டு வெளியேறி ஓடினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், பூமிக்குள் புதைந்த கிணற்றை ஆய்வு செய்தனர். அப்பகுதி மக்களை பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தினர்.

பொதுமக்கள் பாதுகாப்பு கருதி, கிணற்றை சுற்றிலும் கயிறு கட்டி தடுப்பு ஏற்படுத்தினர். மேலும், நேற்று அருகே உள்ள பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘கிணறு இருந்த இடத்தில் ஏற்கனவே ஊற்று இருந்தது. அதனை இடித்து கிணறு கட்டப்பட்டுள்ளது. தொடர் மழை மற்றும் நீரோட்டம் மிகுதியாக இருந்ததால் கிணறு புதைந்திருக்கலாம்’’ என்றனர்.

Related Stories: