கும்பகோணம் அருகே கொள்ளிடம் ஆற்றில் 1.5 லட்சம் கனஅடி தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது

கும்பகோணம்: கும்பகோணம் அருகேயுள்ள கொள்ளிட ஆற்றில் தொடர்ந்து பெய்த கனமழையால் ஒன்றரை லட்சம் கன அடி தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. கும்பகோணம் அருகே நீலத்தநல்லூர் அடுத்த கொள்ளிடம் அணை கும்பகோணம், பாபநாசம் மற்றும் திருவிடைமருதூர் தொகுதிகளை ஒட்டி ஓடுகிறது. இந்நிலையில் கடந்த ஒரு வாரகாலமாக கல்லணை மற்றும் முக்கொம்பு பகுதிகளிலிருந்து கொள்ளிடம் ஆற்றுக்கு தினமும் ஒரு லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. மேலும், சமீபத்தில் பெய்த கன மழையால் வேகமாக நீர் வடிந்து வருவதால் கல்லணையிலிருந்து ஒரு லட்சம் கனஅடி முதல் ஒன்றரை லட்சம் கன அடி வரை கொள்ளிடத்தில் தற்போது தண்ணீர் செல்கிறது.

இதனால் ஆற்றின் இரு கரைகளையும் தொட்டுக் கொண்டு தண்ணீர் செல்கிறது. கடந்த 2005ம் ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தின் போது நான்கரை லட்சம் கன அடி தண்ணீர் சென்றது குறிப்பிடத்தக்கது. தற்போது கொள்ளிடம் ஆற்றில் ஒன்றரை லட்சம் கன அடி தண்ணீர் செல்வதால் பெரிய பாதிப்பு இல்லை என்றாலும் கரைகள் வலுவிழந்து இருப்பதால் கரைகளை பலப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: