தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு நிவாரண முகாம்களில் 10,000 பேர் தஞசம்

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் அனைத்து நீர்நிலைகளும் முழுமையாக நிரம்பியுள்ள நிலையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் குடியிருப்பு பகுதிகள் மற்றும் விளை நிலங்களை வெள்ளம் சூழ்ந்தது. பாதிக்கப்பட்ட 10 ஆயிரம் பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சாத்தனூர் அணையிலிருந்து  வெளியேற்றப்படும் நீர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் மழை வெள்ள நீர்  தென்பெண்ணை ஆற்றின் வழியாக கடலூர் அருகே கடலில் கலக்கிறது. ஒட்டுமொத்த  வெள்ள நீரும் கடலூர் பகுதியில கரைபுரண்டோடும் நிலையில் நீர்வரத்து 1.20  லட்சம் கன அடியாக இருந்ததாக பொதுப்பணித் துறையினர் தெரிவித்தனர்.

இதன்  காரணமாக ஆற்றின் இரு கரைகளையும் தாண்டி கரையோர பகுதிகளில் உள்ள  குடியிருப்புகளை நேற்றுமுன்தினம் இரவு வெள்ளநீர் சூழ்ந்து பொதுமக்களின்  இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. கடலூர் நகர, கிராம பகுதிகளில் வெள்ளம்  சூழ்ந்த நிலையில் 9000 பேர் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில்  தஞ்சமடைந்துள்ளனர். கடலூர், பண்ருட்டி, விருத்தாசலம் உள்ளிட்ட இடங்களில் 22  முகாம்களில் 3,207 குடும்பங்களை சார்ந்த 10,306 பேர் தங்க  வைக்கப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் 2 கிலோ மீட்டர் தூரம், சாலையில் 3 அடிக்கு மேல் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் புதுச்சேரி- சென்னை இடையே போக்குவரத்து துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் படகில் சென்று மூதாட்டி உடல் அடக்கம்

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி கீழ்பாதி ஊராட்சியை சேர்ந்த உச்சிமேடு கிராமத்திற்கு செல்லும் வழியில் நீரோடையில் உள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்து வெள்ளம் ஓடுகிறது. இந்நிலையில் கீழ்பாதி கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். ஓடை நீரில் இறங்கி சடலத்தை எடுத்து செல்ல மக்கள் முடிவு செய்தனர். இதையறிந்து, போலீசார், தீயணைப்புத் துறையினர் மூலம் பிளாஸ்டிக் படகை வரவழைத்து மூதாட்டியின் உடலை எடுத்துச் சென்று சுடுகாட்டில் அடக்கம் செய்ய வைத்தனர்.

பாலாற்று வெள்ளத்தில் சிக்கிய மீட்பு குழுவினர்

வேலூர் அடுத்த விரிஞ்சிபுரம் பாலாற்று தரைப்பாலத்தை கடந்த 18ம் தேதி கடக்க முயன்ற கே.வி.குப்பம் அடுத்த வடுகந்தாங்கலை சேர்ந்த ராணுவ வீரர் மனோகரன் பைக்குடன் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். அவரை மீட்கும்பணியில் அரக்கோணத்தில் இருந்து வந்த பேரிடர் மீட்பு குழுவினர் நேற்று ஈடுபட்டனர். மோட்டார் பொருத்தப்பட்ட மிதவை படகில் சென்று தேட முதலில் 5 பேர் கொண்ட பேரிடர் மீட்பு குழுவினர் களம் இறங்கினர். ஆற்று வெள்ளத்தின் வேகம் படகை அதன் போக்கில் திருப்பியது. படகில் இருந்த கிளாம்புடன் கயிறு அறுந்து ஆற்றில் விழுந்தது. இதனால் ஆற்று வெள்ளத்தில் சிக்கிய பேரிடர் மீட்பு குழுவினர் திணறினர். மேலும் படகும் மூழ்கத்தொடங்கியது. இதனால் சுதாரித்த அவர்கள் அடுத்தடுத்து ஆற்றில் குதித்தனர். உடனே படகு வெள்ளத்தில் மூழ்கியது. மற்றொரு குழுவினர் சென்று பல மணி நேரம் போராடி அவர்களை மீட்டனர்.

Related Stories: