நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை; கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து 13,181 கனஅடியாக அதிகரிப்பு

ஓசூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், ஓசூர் கெலவரப்பள்ளி மற்றும் கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரிப் பதும் குறைவதுமாக உள்ளது. ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று 2,760 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி 2,563 கனஅடியாக சரிந்துள்ளது. அணையில் இருந்து ஆற்றில் வினாடிக்கு 3060 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் மொத்த உயரமான 44.28 அடியில் தற்போது 41.33 அடிக்கு தண்ணீர் உள்ளது. கர்நாடகாவிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் வரக்கூடிய நீரில் ரசாயன கழிவுகள் வெளியேற்றப்படுவதால் கெலவரப்பள்ளி அணைக்கு வரக்கூடிய நீர், நுரைபொங்கி காட்சியளிக்கிறது. ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஆற்றை கடக்கவோ, வாகனங்கள் மற்றும் கால்நடைகளை கழுவவோ செல்ல வேண்டாமென்று வருவாய்த்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோல், கிருஷ்ணகிரி அணைக்கு நேற்று 7,026 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 13,181 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து 14,715 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. தொடர்ந்து கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய 5 மாவட்ட தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அணை அருகேயுள்ள தரைப்பாலத்தை யாரும் கடக்க வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. அணையின் மொத்த உயரமான 52 அடியில் தற்போது 50 அடிக்கு தண்ணீர் உள்ளது.

Related Stories: