ஆரணி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழையால் 10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் சேதம்-நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

ஆரணி :  ஆரணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக 10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. எனவே, அதிகாரிகள் ஆய்வு செய்து நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தொடர் மழை காரணமாக ஆரணி பகுதியில் உள்ள  நாகநதி, செய்யாற்று படுகை, கமண்டல நாகநதி ஆகிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டள்ளது. பெரும்பாலான ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிந்து வருகிறது.

இந்நிலையில், ஆரணி அடுத்த அடையபுலம் ஏரி முழு கொள்ளளவு எட்டி உபரிநீர் வெளியேறி வருகிறது. நீர்வரத்து அதிகரித்து வருவதால் ஏரிக்கரைகளில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த ஏரிக்கரை உடைந்தால் 300 ஏக்கர் நெற்பயிர்கள், 5க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அதேபோல், விண்ணமங்கலம் அருகே தெள்ளூர் செய்யாற்று  படுகையில் உள்ள தடுப்பணையை சுற்றியுள்ள பகுதியில் அமைக்கப்பட்டுள்ள  கரைகளில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் வெளியேறி வருகிறது. விண்ணமங்கலம்  கிராமத்திற்குள் தண்ணீர் வருவதற்கு முன்பு உடைந்துள்ள கரைகளை பலப்படுத்த  வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. பேராபத்து ஏற்படுவதற்கு முன்பு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு கரைகளை பலப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.    

அதேபோல், கனமழை காரணமாக ஆரணி தாலுகாவில் சம்பா பட்டத்தில் பயிரிட்டிருந்த 10 ஆயிரம் ஏக்கர் உயர்ரக நெற்பயிர்கள், வாழை, மஞ்சள், சேம்பு, பூ உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. வேளாண் துறை மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் பயிர் சேதங்களை முறையாக கணக்கெடுப்பு செய்து நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், ஆரணி சைதாப்பேட்டை ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேறி விஏகே நகர், தேனருவி நகர், பள்ளிக்கூட தெரு  ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்தது. தகவலறிந்த திமுக நகர செயலாளர் ஏ.சி.மணி தனது செலவில் ஜேசிபி இயந்திரம் மூலம் கால்வாய்களை தூர்வாரி, குடியிருப்பு பகுதியில் தேங்கிருந்த தண்ணீர் வெளியேற்ற நடவடிக்கை எடுத்தார்.

மேலும், ஆரணி கிளைச்சிறை எதிரில் இருந்த வேப்ப மரம் நேற்று கோட்டை மைதானத்தில் சாய்ந்து விழுந்தது. விண்ணமங்கலம் செய்யாற்றுப்படுக்கையில் ஏற்பட்ட வெள்ளத்தில் தச்சூர் பகுதியில் இருந்து 3 மாடுகள் அடித்து செல்லப்பட்டுள்ளது.

Related Stories: