திருத்தணி முருகன் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா கோலாகலம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில் நேற்று கார்த்திகை மாத கிருத்திகை விழாவையொட்டி, அதிகாலை 4:30 மணிக்கு மூலவருக்கு பால், பன்னீர் விபூதி, பஞ்சாமிர்தம் போன்ற பொருட்களால், சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூலவருக்கு தங்கக்கவசம், தங்கவேல், பச்சை மாணிக்க மரகதகல் மற்றும் வைரஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. காலை 10 மணிக்கு காவடி மண்டபத்தில் உற்சவர் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை 4:30 மணிக்கு 200 கிலோ நெய், 35 கிலோ எடை கொண்ட திரி ஆகியவற்றிக்கு மலைக்கோயிலில் சிறப்பு பூஜை நடத்தி பச்சரிசி மலையில், செம்பு கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்பட்டது. அப்போது, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், ‘அரோகரா, அரோகரா’ என பக்தி முழக்கமிட்டனர்.

இந்த விழாவில் அரக்கோணம் சப்-ஜட்ஜ் ஜெகதீஸ்வரி தன் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். மேலும், திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன், கோயில் உதவி ஆணையர் ரமணி ஆகியோர் துவக்கி வைத்தனர். மாலை 6 மணிக்கு உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன், கோயில் மயில் மண்டபத்தில் காட்சியளித்தார்.  அப்போது, சொக்கப்பனையில் நெய் தீபம் ஏற்றப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக மாடவீதியில் சொக்கப்பனையில் தீபம் ஏற்றப்படவில்லை. அதேநேரத்தில், கோயிலின் எதிரில் உள்ள பச்சரிசி மலையில் பெரிய செம்பு கொப்பரையில் மகாதீபம் ஏற்றப்பட்டது.  இந்த தீபம் நேற்று முதல் மூன்று நாட்கள் எரியும். கார்த்திகை தீபத்திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் பரஞ்சோதி, மலைக்கோயில் பேஷ்கார் பழனி மற்றும் கோயில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

Related Stories: