சென்னையில் பயனற்ற நிலையில் உள்ள வானிலை ஆய்வு கருவிகளை போர்க்கால அடிப்படையில் சரி செய்ய வேண்டும்; பிரதமருக்கு தயாநிதிமாறன் எம்பி மீண்டும் வலியுறுத்தல்.!

சென்னை: சென்னையில் தொடர்ந்து பயனற்ற நிலையில் உள்ள வானிலை ஆய்வு கருவிகளை போர்க்கால அடிப்படையில் சரி செய்ய வேண்டும் என்று பிரதமரை தயாநிதிமாறன் எம்பி மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர்  தயாநிதிமாறன், பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் அனுப்பியிருந்தார். தற்போது மீண்டும் அதே கருத்தை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ள டுவிட்டரில், “சென்னை துறைமுகம் நூற்றாண்டு கட்டிடத்தில் பழுதாகியுள்ள எஸ்-பேண்ட் டாப்ளர் ரேடாரை சீரமைப்பது, பள்ளிக்கரணை என்ஐஓடி-ல் தயாராகி வரும் எக்ஸ் பேண்ட் டாப்ளர் ரேடாரை விரைந்து மக்கள் பயன்பாட்டிற்கு வழங்குவது ஆகிய பணிகளில் ஒன்றிய அரசு மெத்தனமும் காலதாமதமும் செய்கிறது. இதுகுறித்து கடந்த 2020 டிசம்பர் 2ம் தேதியே தங்களுக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன். ஆனால் ஓராண்டு கழித்தும் எந்தவித சீரமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை.

கடந்த நவம்பர் 6ம் தேதி இரவு அதிகபட்சமாக சென்னையில் 200 மி.மீ. மழை பெய்தது. 2015ம் ஆண்டு மழை வெள்ளத்திற்கு பிறகு இதுவே அதிகபட்ச மழையாகும். இந்த மழைக்கு முன், மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தவறான தரவுகள் இடம் பெற்றுள்ளன. மேலும் இப்பெருமழைக்கான எந்தவித அறிகுறியும் அந்த அறிக்கையில் இடம் பெறவில்லை. இது குறித்த கேள்விகளுக்கு மண்டல வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் ரேடாரில் பழுது ஏற்பட்டுள்ளது என்றும் அதற்கான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றது என்றும் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு நான் தங்களுக்கு எழுதிய கடிதத்தில் பள்ளிக்கரணை என்ஐஓடி-ல் அமைந்திருக்கிற வானிலை ரேடார் அதிகபட்சமாக 100 முதல் 150 கிலோ மீட்டர் தூர சுற்றளவை மட்டுமே கணிக்க கூடியதாய் இருக்கும் என்றும் இது சென்னை துறைமுகத்தில் உள்ள வானிலை ஆய்வு ரேடாரின் திறனுக்கு சமமாக அமைய வாய்ப்பில்லை என்பதையும் குறிப்பிட்டிருந்தேன்.

சென்னை துறைமுக நூற்றாண்டு கட்டிடத்தில் உள்ள எஸ்-பேண்ட் டாப்ளர் வானிலை ரேடார் கிட்டத்தட்ட 500 கிலோ மீட்டர் சுற்றளவில் வானிலை நிலவரத்தை கண்காணித்து வழங்கும் திறன் பெற்றது. இதன் மூலம் சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களில் பெய்யும் மழையின் தீவிரம் குறித்த தகவல்களை பெற முடியும். கடந்த காலங்களில் வங்காள விரிகுடாவில் உருவான புயல்களை கண்டறிந்ததிலும், புயல் எச்சரிக்கைகளை விரைவாக வழங்கியதிலும் வானிலை ஆய்வாளர்களுக்கு இந்த ரேடார் மிகச்சிறந்த பங்களிப்பை கொடுத்துள்ளது. எனவே, இந்திய வானிலையியல் துறையும், ஒன்றிய புவி அறிவியல் துறையும், சென்னை நூற்றாண்டு கட்டிடத்தில் பழுதாகியுள்ள எஸ்-பேண்ட் டாப்ளர் ரேடாரை போர்க்கால அடிப்படையில் பழுதுநீக்கி, பள்ளிக்கரணை என்ஐஓடி-ல் அமைந்திருக்கும் எக்ஸ்-பேண்ட் டாப்ளர் ரேடாரின் சோதனை முயற்சிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வருவதை உறுதி செய்யுமாறு மீண்டும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: