நகர்புற உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடத்த திட்டம்; வார்டுவாரியாக வாக்காளர் பட்டியல் தயாரிப்பு தீவிரம்.! வரும் 25ம் தேதி வெளியிட நடவடிக்கை

வேலூர்: நகர்புற உள்ளாட்சி தேர்தல் 2 அல்லது 3 கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளதால் வார்டு வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் தயாரித்து வரும் 25ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் வரும் ஜனவரி மாதத்திற்குள் தேர்தலை நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் விரைவில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகளும் தொண்டர்களை தயார்படுத்தி வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்தந்த மாவட்டங்களில் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மாநகராட்சி, நகராட்சிகள் பேரூராட்சிகள் உள்ளன. இவற்றுக்கு தேர்தல் நடத்த தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 1ம் தேதி வெளியிடப்பட்ட சட்டப்பேரவைத் தொகுதி வாக்காளர் வரைவு பட்டியலின் அடிப்படையில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் வார்டுகள் வாரியாக வாக்காளர்கள் பிரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. வரும் 24ம் தேதிக்குள் வாக்காளர்களின் விவரங்கள் ஆன்லைனில் பதிவு செய்யப்பட்ட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. 25ம் தேதி வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில் வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து உள்ளாட்சித்துறை அதிகாரிகள் கூறியதாவது: நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். வாக்குப்பதிவு இயந்திரங்களும் தயார் நிலையில் உள்ளன. மேலும் பல்வேறு கட்ட பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். நகர்புற உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்கள் அல்லது 3 கட்டங்களாக நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகள் அனைத்தும் நடந்து வருகிறது. உதாரணத்திற்கு மாநிலம் 3 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.

அதில் 10 மாவட்டங்கள் அல்லது 15 மாவட்டங்கள் என பிரித்து தேர்தல் நடத்தப்பட உள்ளது.  ஒவ்வொரு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் எத்தனை வார்டுகள் உள்ளன என தனித்தனியாக பிரிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் வார்டு வாரியாக தனித்தனியாக தயாரிக்கப்பட்டு வருகிறது. குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் ஒரே வார்டில் தான் உள்ளார்களா? என்பதை உறுதி செய்து பட்டியல் தயாரிக்கப்படுகிறது. வேறு வார்டில் பெயர் இருந்தால் அதை ஒருங்கிணைத்து ஒரே வார்டில் இணைத்து வருகின்றனர். மேலும் பட்டியலில் யார் பெயரும் விடுபடாமல் தயாரிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தயாரிக்கப்பட்டுள்ள வார்டுவாரியான வாக்காளர் பட்டியல் வரும் 24ம் தேதிக்குள் முடிக்கப்படும். வரும் 25ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னதாகவே அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: