கல்வராயன்மலை பெரியார் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

சின்னசேலம்: கல்வராயன்மலையில் கனமழை பெய்து வருவதால் பெரியார் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க அதிரடி தடை விதிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன்மலை இயற்கை அழகுடன் காணப்படுவதாலும், பல்வேறு நீர்வீழ்ச்சிகள் இருப்பதாலும் இங்கு விழுப்புரம், கடலூர், புதுவை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக கல்வராயன்மலையில் மேகம், பெரியார், செருக்கலூர், எட்டியாறு உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட நீர்விழ்ச்சிகள் இருந்தபோதிலும் மேகம், பெரியார், செருக்கலூர் நீர்வீழ்ச்சிகளுக்குத்தான் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அதாவது வேன், கார், பேருந்துகளில் குடும்பத்தோடு வந்து குளித்து மகிழ்ந்து மலையின் இயற்கை அழகை கண்டு களித்து செல்கின்றனர்.

இருப்பினும் மேகம், செருக்கலூர் நீர்வீழ்ச்சிகள் குளிப்பதற்கு ஏற்ற வகையில் இல்லாததால் அங்கு வந்த சுற்றுலா பயணிகள் சறுக்கி விழுந்தும், ஆற்றில் அடித்து செல்லப்பட்டும் இறந்த சம்பவங்கள் நடந்துள்ளது. சமீபத்தில்கூட செருக்கலூர் நீர்வீழ்ச்சியில் குளிக்க வந்த 11வயது மாணவன் மாயமாகியும் சடலம் கிடைக்காமல் கடந்த 8 நாட்களுக்கும் மேலாக தேடி வருகின்றனர். ஆனால் பெரியார் நீர்வீழ்ச்சியில் அவ்வாறான சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை. இந்நிலையில் கல்வராயன்மலையில் பெய்துவரும் கனமழையின் காரணமாக பெரியார் நீர்வீழ்ச்சியில் திடீர், திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால் கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பி ஜியாஉல்ஹக் உத்தரவின்பேரில் சுற்றுலா பயணிகள், மக்களின் நலன்கருதி பெரியார் நீர்வீழ்ச்சியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கரியாலூர் காவல் துறையினரும், வனத்துறையினரும் அடிக்கடி நீர்வீழ்ச்சி பகுதிகளில் ரோந்து சென்று காவல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: