காஷ்மீரில் இருவேறு இடங்களில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!!

ஸ்ரீநகர்: காஷ்மீரில் இருவேறு இடங்களில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப் பட்டனர்.தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாம்பே, கோபால்போரா ஆகிய 2 இடங்களில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் நேற்று  பாதுகாப்பு படை வீரர்கள் உள்ளூர் போலீஸாருடன் இணைந்து இரு குழுக்களாக பிரிந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பாம்பே பகுதியில்  மறைந்திருந்த தீவிரவாதிகள் திடீரென வீரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதனை தொடர்ந்து வீரர்கள் திருப்பி துப்பாக்கி சூடு நடத்தியதில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

தப்பி சென்ற தீவிரவாதிகளை வீரர்கள் தொடர்ந்து தேடி வருகின்றனர். இதேபோல் கோபால்போரா  பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது வீரர்கள் நடத்திய என்கவுன்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். கோபால்போராவில் நடந்த என்கவுன்ட்டரில் எதிர்ப்பு முன்னணி (டிஆர்எப்) என்ற தீவிரவாத அமைப்பின் கமாண்டர் அஃபக் சிக்கந்தர் கொல்லப்பட்டதாக இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸ் (காஷ்மீர்) விஜய் குமார் தெரிவித்துள்ளார். இதனிடையே காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தில் காய்ந்து போன புதர்களில் இருந்து நேற்று முன்தினம் மாலை முதல் காட்டுத்தீ எரியத்தொடங்கியது. இது எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதிக்கு பரவியது. இதில் அங்கு புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகள் வெடித்து சிதறின. தீயை அணைக்கும் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

Related Stories: