திருப்போரூர் ஒன்றியம் படூர் ஊராட்சியில் வெள்ள நீர் வடியாததால் கால்வாயாக மாறிய தெரு: பொதுமக்கள் கடும் அவதி

திருப்போரூர்: சென்னையை ஒட்டிய புறநகர் பகுதியான திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய படூர் கிராமத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் முழுமையாக விவசாயம் நடந்தது. பின்னர், சென்னை புறநகர் வளர்ச்சி காரணமாக படூர் பகுதி முழுவதும் ஏராளமான வீட்டு மனைப்பிரிவுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், கல்லூரிகள், வர்த்தக நிறுவனங்கள் உருவாயின. இதன் காரணமாக, விவசாய நிலங்கள் அதையொட்டி இருந்த கால்வாய்கள் அடைக்கப்பட்டு தெருக்களும், வீடுகளும் உருவாகி விட்டன. மழைக்காலங்களில் படூர் கிராம ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் மற்றும் பொன்மார், வேங்கைவாசல், வேங்கடமங்கலம் ஆகிய பகுதிகளில் இருந்து வரும் வெள்ள நீர் ஆகியவற்றால் படூர் கிராமத்தில் மழை விட்ட போதும் வெள்ளம் வடியாத நிலையே இருப்பது வழக்கம்.

இந்நிலையில், கடந்த வாரம் பெய்த தொடர் மழையால், படூர் கிராமத்தில் வழக்கம்போல் வெள்ளநீர் இதுவரை வடியவில்லை. இதனால், தெருக்களில் தண்ணீர் ஆறாக வழிந்தோடுகிறது. குறிப்பாக வேம்புலி அம்மன் கோயில் தெரு முழுவதும் தண்ணீர் சென்றதால் ஊராட்சி நிர்வாகம் சார்பில் தெருவின் நடுவே கால்வாய் தோண்டப்பட்டு வெள்ளநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இந்த தெருவில் வசிப்பவர்கள் தங்களின் வீடுகளுக்கு செல்வதற்கு கடும் சிரமத்தை சந்திக்கின்றனர்.

இதுகுறித்து படூர் ஊராட்சி மன்ற தலைவர் தாரா சுதாகர் கூறுகையில், தற்போது தெருவாக இருக்கும் பகுதி, ஒரு காலத்தில் கால்வாயாக இருந்தது. இதனால், தற்போதும் வெள்ளநீர் இந்த தெரு வழியாக வெளியேறுகிறது. கடந்த பல ஆண்டுகளாக இந்த வெள்ளநீர் பிரச்னையால் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்படைந்தன. தற்போது, அவசியத்தை கருதி தெருவில் கால்வாய் தோண்டி வெள்ளநீரை வெளியேற்றுகிறோம். இதனால் அங்கு வசிக்கும் 20 குடும்பங்களுக்கு மட்டும் தற்காலிக சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு அளிக்கும்படி கலெக்டரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். கலெக்டர், பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் இப்பிரச்னையை தீர்க்க திட்டம் வகுக்கும்படி உத்தரவிட்டுள்ளார். அடுத்த ஆண்டுக்குள் படூர் கிராமத்தில் தண்ணீர் தேங்காத நிலை உருவாக்க முயற்சி எடுத்துள்ளோம் என்றார்.

Related Stories: