கோயில் குளங்களை புனரமைத்து பாதுகாக்கும் பணிகள் நடக்கிறது: ஐகோர்ட் கிளையில் அரசு தகவல்

மதுரை: கோயில் குளங்களை புனரமைத்து பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஐகோர்ட் கிளையில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கே.கே.ரமேஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘கோயில்களுக்கு சொந்தமாக ஏராளமான குளங்கள் உள்ளன. இவை முறையாக பராமரிக்கப்படவில்லை. குப்பைகள் கொட்டுவது மற்றும் கழிவுநீர் கலப்பதை தடுத்து, முறையாக தூர்வாரி, புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். குளங்களை மாசுபடுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு அபராதம் விதித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்யநாரயணா, வேல்முருகன் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு வக்கீல் சரவணன் ஆஜராகி, ‘‘கோயில் குள ஆக்கிரமிப்பை அகற்றுதல், சுற்றுச்சுவர் அமைத்தல், தூர்வாரி ஆழப்படுத்துதல், முறையாக படிக்கட்டுகள் அமைத்தல், மழைநீர் குளத்திற்கு வருவதற்கான வடிகால் அமைத்தல், குளங்களை பாதுகாப்பது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

2,379 குளங்களில் 400 குளங்களில் பணிகள் முடிந்துள்ளன. முக்கிய கோயில் குளங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு இணைக்கப்பட்டுள்ளது’’ என்றார். இதையடுத்து நீதிபதிகள், மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பான நிலை குறித்து, அறநிலையத்துறை தரப்பில் பதில் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை டிச. 15க்கு தள்ளி வைத்தனர்.

Related Stories: