திரிணாமுல் எம்எல்ஏ.க்களை கைது செய்த சிபிஐ, அமலாக்கத் துறை மீது உரிமை மீறல் தீர்மானம் தாக்கல்: ஒன்றிய அரசு மீது மம்தா அடுத்த தாக்குதல்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ.க்களை கைது செய்த சிபிஐ, அமலாக்கத் துறை அதிகாரிகள் மீது சட்டப் பேரவையில் உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் நடந்த நாராதா ஊழல் வழக்கில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள், எம்எல்ஏ.க்களுக்கு தொடர்பு இருப்பது உறுதியானது. இது தொடர்பாக அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கில் திரிணாமுல் எம்எல்ஏ.ககள் பிர்கத் ஹக்கிம், மதன் மித்ரா, சுப்ரதா முகர்ஜி ஆகியோரை சிபிஐ கடந்த மே மாதம் கைது செய்தது.

இதற்கு, எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் மம்தா சிபிஐ அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடத்தினார். சபாநாயகர், மாநில அரசின் அனுமதியின்றி அவர்களை எப்படி கைது செய்யலாம், ஆளுநர் எந்த அடிப்படையில் அனுமதி அளித்தார் என்று அவர் ஆவேசமாக கேள்வி எழுப்பினார். இந்நிலையில், கைது நடவடிக்கயைில் ஈடுபட்ட சிபிஐ, அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு எதிராக சட்டப்பேரவையில் நேற்று உரிமை மீறல் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. தீர்மானத்தை  தாக்கல் செய்து பேசிய அமைச்சர் தபஸ் ராய், `எம்எல்ஏ.க்களை கைது செய்வதற்கு சபாநாயகரின் முன் அனுமதியை சிபிஐ பெறவில்லை, அது பற்றி அவருக்கு தெரிவிக்கப்படவும் இல்லை. இதனால், மாநில அரசுக்கு முன்கூட்டியே தெரிவிக்காத சிபிஐ, அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது சட்டப்பேரவையில் உரிமை மீறல் தீர்மானம் தாக்கல் செய்யப்படுகிறது,’ என்று தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தில் தன்னிச்சையாக சிபிஐ., அமலாக்கத் துறை விசாரணை நடத்துவதற்கு முதல்வர் மம்தா பானர்ஜி தடை விதித்துள்ளார். அதற்கு அரசின் முன் அனுமதியை இவை பெற வேண்டும். எல்லை பாதுகாப்பு படையின் எல்லை அதிகார வரம்பை ஒன்றிய அரசு சமீபத்தில் அதிகரித்தது. இந்த உத்தரவை நிராகரித்து, சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் முதல்வர் மம்தா தீர்மானம் நிறைவேற்றினார். அதற்கு அடுத்த நாளே ஒன்றிய அரசின் மீது அடுத்த தாக்குதலை தொடுக்கும் வகையில், சிபிஐ, அமலாக்க அதிகாரிகள் மீதும் உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* பெண்களிடம் அத்துமீறல்? எல்லை படை விளக்கம்

‘சோதனை என்ற பெயரில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் பெண்களிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுகின்றனர்’ என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ உதயன் குகா நேற்று முன்தினம் குற்றம் சாட்டினார். இதற்கு பதிலளித்து எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எப்) கூடுதல் டிஜிபி குரானி நேற்று அளித்த பேட்டியில், ``எல்லைப் பகுதியில் பிஎஸ்எப், மாநில போலீசாரின் கரங்கள் வலுப்படுவதை விரும்பாத சிலர் புரளியை கிளப்பி விட்டுள்ளனர். இதனால், பிஎஸ்எப்.க்கும் மாநில போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்படும் என்று கூறுவது அடிப்படை ஆதராமற்றது. பிஎஸ்எப் பிரிவில் உள்ள பெண் போலீசாரை கொண்டே பெண்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்,’’ என்றார்.

Related Stories: