இயக்குனரும் நடிகருமான ஆர்.என்.ஆர்.மனோகர் மரணம்

சென்னை: பிரபல இயக்குனரும், நடிகருமான ஆர்.என்.ஆர்.மனோகர் (61), நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். இயக்குனர் கே.எஸ்.ரவிகுமாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஆர்.என்.ஆர்.மனோகர், தமிழில் வெளியான ‘மைந்தன்’, ‘கோலங்கள்’, ‘புதுமைப்பித்தன்’, ‘தென்னவன்’, ‘வந்தே மாதரம்’ ஆகிய படங்களுக்கு வசனம் எழுதினார். ‘புன்னகை பூவே’ படத்துக்கு கதை எழுதினார். பிறகு நகுல் நடித்த ‘மாசிலாமணி’, நந்தா நடித்த ‘வேலூர் மாவட்டம்’ ஆகிய படங்களை இயக்கினார்.

இதையடுத்து நடிப்பில் தீவிர கவனம் செலுத்தினார். ‘தில்’, ‘வீரம்’, ‘என்னை அறிந்தால்’, ‘நானும் ரவுடிதான்’, ‘வேதாளம்’, ‘மிருதன்’, ‘ஆண்டவன் கட்டளை’, ‘அச்சம் என்பது மடமையடா’, ‘விஸ்வாசம்’, ‘காஞ்சனா 3’, ‘காப்பான்’, ‘கைதி’ உள்பட பல தமிழ் படங்களிலும், தெலுங்கு படத்திலும் நடித்தார். பெரும்பாலும் அவர் அரசியல்வாதியாகவும், போலீசாகவும் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடத்தில் நடித்து வந்தார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம், ‘4 ஸாரி’. கடந்த சில வாரங்களாக மூச்சுத்திணறல் காரணமாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த ஆர்.என்.ஆர்.மனோகர், நேற்று காலை திடீர் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார்.

மாலையில் அவரது இறுதிச்சடங்கு நடந்தது. ஆர்.என்.ஆர்.மனோகர் மறைவுக்கு தமிழ் திரையுலகை சேர்ந்த நடிகர்கள், இயக்குனர்கள் இரங்கல் தெரிவித்து இருக் கின்றனர்.

முதல்வர் இரங்கல்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக தலைமை சட்ட ஆலோசகர் என்.ஆர்.இளங்கோ எம்.பியின் சகோதரர் ஆர்.என்.ஆர்.மனோகர் மறைந்தார் என்ற வேதனை மிகுந்த செய்தியறிந்து வருத்தமுற்றேன். நடிகராகவும், இயக்குனராகவும் அறியப்பட்ட மனோகர் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு, அவரது பிரிவால் வாடும் என்.ஆர்.இளங்கோ உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கும், கலையுலக நண்பர்களுக்கும் ஆறுதல்தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: