திருச்சியில் ரூ1 கோடி மதிப்பிலான பொதுப்பாதையை சசிகலாவின் சினிமா நிறுவனம் ஆக்கிரமிப்பு: முதல்வர் தனிப்பிரிவில் புகார்

திருச்சி: சசிகலா குடும்பத்துக்கு சொந்தமான சினிமா நிறுவனத்தினர் திருச்சியில் ரூ.1 கோடி மதிப்பிலான தனியார் பொதுப்பாதையை ஆக்கிரமிப்பு செய்ததால் பாதிக்கப்பட்டவர் முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் மனு அனுப்பியுள்ளார். திருச்சி பாலக்கரை மெயின்ரோட்டை சேர்ந்தவர் செந்தில்ராஜ்குமார்(53). ஷேர் மார்க்கெட் தொழில் செய்து வருகிறார். மெயின் ரோட்டில் உள்ள காவேரி தியேட்டர் அருகே இவரது வீடு உள்ளது. இவரது வீட்டுக்கு செல்ல தனியார் 4 பேருக்கு சொந்தமான பொதுப்பாதை உள்ளது.

இந்த வழியாகத்தான் அப்பகுதியினர் சென்று வருகின்றனர். இந்நிலையில் தியேட்டரை கடந்த அதிமுக ஆட்சியில் சசிகலாவின் குடும்பத்துக்கு சொந்தமான யூனிட் ஆப் ஜாஸ் சினிமாஸ் என்ற நிறுவனம் தன்வசப்படுத்தியது. அதன்பின்னர் சில ஆண்டுகளில் அந்நிறுவனம், தனியார் பொதுப்பாதையில் ரூ.1 கோடி மதிப்புடைய 900 சதுர அடி அளவுக்கு ஆக்கிரமித்து இருசக்கர வாகன நிறுத்துமிடம் அமைத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அப்போதைய கலெக்டர் ராஜாமணிக்கு செந்தில்ராஜ்குமார் புகார் மனு அளித்தார்.

மனுவுக்கு பதில் கடிதம் வந்ததோடு சரி அதன் பிறகு எந்த விசாரணையும் நடக்கவில்லை. இந்நிலையில் செந்தில்ராஜ்குமார், மீண்டும் திருச்சி கலெக்டர் சிவராசுவுக்கு புகார் மனு அளித்தார். அதன் பேரில், திருச்சி ஆர்டிஓ விஸ்வநாதன் சமீபத்தில் விசாரணை நடத்தினார். விசாரணை முடிவில் சர்வேயர் மூலம் அளந்து அவரது அறிக்கை வந்த பிறகு, தியேட்டர் நடத்துவதற்காக ஆண்டு தோறும் புதுப்பிக்கப்படும் சி படிவம் வழங்கப்படும் என தெரிவித்தார். இதற்கிடையே ஒரு மாதத்துக்கு தேவையான இ-பர்மிட் தியேட்டர் நிர்வாகத்துக்கு வழங்கப்பட்டது.

இது தொடர்பாக செந்தில்ராஜ்குமார், தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் மனு அனுப்பி உள்ளார். இது குறித்து செந்தில்ராஜ்குமார் கூறியதாவது: அதிமுக ஆட்சியில் சசிகலா குடும்பத்துக்கு சொந்தமான சினிமா நிறுவனம் தனியார் பொதுப்பாதையை ஆக்கிரமித்து கதவு அமைத்தனர். தியேட்டர் நடத்த ஒரு மாதத்துக்கான இ-பர்மிட் மட்டும் வழங்கி உள்ளனர். மீண்டும் அந்த தியேட்டருக்கு இ-பர்மிட், சி படிவம் வழங்கக்கூடாது. இது தொடர்பாக தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு உரிய ஆவணங்களுடன் புகார் மனு அனுப்பி உள்ளேன்.

கடந்த ஆட்சியில் அவர்களிடம் அரசியல் பலம், பண பலம், ஆள் பலம் இருந்ததால் எங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை. அச்சுறுத்துல்களும் இருந்தது. இப்பிரச்னையில் எனக்கு ஏதேனும் நேர்ந்தால், தியேட்டரின் அதிகாரம் பெற்ற பிரீதா மற்றும் ஜாஸ் சினிமா மட்டுமே பொறுப்பு. இவ்வாறு அவர் கூறினார்.

ஆக்டோபஸ் வளர்ச்சி

கடந்த அதிமுக ஆட்சியின்போது ஜாஸ் சினிமாஸ் உருவானது. நாடு முழுவதும்  130க்கும் மேற்பட்ட தியேட்டர்களை இந்நிறுவனம் தன் வசப்படுத்தியது. குறுகிய  காலத்திலேயே தமிழ் திரையுலகில் ஆக்டோபஸ் வளர்ச்சியை சந்தித்தது. சசிகலாவின்  அண்ணன் ஜெயராமன்-இளவரசி தம்பதியரின் மகன் விவேக் ஜெயராமன் இந்நிறுவனத்தை  நடத்தி வருகிறார்.

Related Stories: