கிளாஸ்கோ பருவநிலை தீர்மானம் குறித்து விளக்கம் நிலக்கரி பயன்பாட்டை குறைப்பதில் இந்தியாவை ஆதரிக்கும் சீனா

பீஜிங்: இங்கிலாந்தின் கிளாஸ்கோ நகரில் நடந்த ஐநா பருவநிலை உச்சி மாநாட்டில், கடைசி நிமிடத்தில் இந்தியா கொண்டு வந்த திருத்தத்தால், நிலக்கரி பயன்பாட்டை படிப்படியாக நிறுத்துவது என்பதற்கு பதிலாக ‘நிலக்கரி பயன்பாட்டை படிப்படியாக குறைப்பது’ என மாற்றி இறுதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பல உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த விஷயத்தில் இந்தியாவுக்கு ஆதரவளித்த நாடுகளில் சீனாவும் ஒன்று. பல விஷயங்களில் இந்தியாவுடன் முரண்பட்டிருக்கும் சீனா இந்த விஷயத்தில் ஆதரவாக நிற்கிறது. இந்த மாற்றத்தின் மூலம் மாநாட்டின் தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்ததற்காக, இந்தியாவும் சீனாவும் அவர்களின் நிலைப்பாடு குறித்து விளக்கம் அளிக்க வேண்டுமென மாநாட்டின் அவைத் தலைவர் அலோக் சர்மா வலியுறுத்தி இருந்தார்.

இது குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ஷாவோ லிஜியன் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: ‘நிலக்கரி பயன்பாட்டை குறைப்பது என்பது அனைத்து நாடுகளும் செயல்படுத்தக் கூடிய இலக்கு. எரிசக்தி கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் கார்பன் நுகர்வு விகிதத்தை குறைத்தல் என்பது முற்போக்கான முயற்சியாகும். இந்த விஷயத்தில் பல்வேறு நாடுகளின் தேசிய சூழ்நிலைகள், அவற்றின் வளர்ச்சி நிலை, அவைகளுக்கு வெவ்வேறு வளங்களுக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும். எனவே நாம் முதலில் இந்த எரிசக்தி இடைவெளியை கருத்தில் கொண்டு வளரும் நாடுகளுக்கு எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். வளர்ந்த நாடுகள் முதலில் நிலக்கரியைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். வெளிநாட்டில் புதிய நிலக்கரி மின் நிலைய திட்டங்களை நாங்கள் உருவாக்க மாட்டோம்’ என உறுதி அளித்துள்ளோம் என்றார்.

Related Stories: