அரசு அமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து மொழிகளையும் ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும்: வைகோ வலியுறுத்தல்

சென்னை: அரசு அமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து மொழிகளையும் இந்தியாவின் ஆட்சிமொழியாக அறிவிக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் நடைபெற்ற ஆட்சி மொழி மாநாட்டில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘இந்திதான் இந்தியாவின் ஆட்சி மொழி; என் தாய்மொழியை விட நான் இந்தியை அதிகமாக நேசிக்கிறேன் என்று பேசி இருக்கின்றார்.

அத்துடன் நில்லாமல், ‘உள்துறை அமைச்சகத்தின் ஒரு கோப்பு கூட இப்போது ஆங்கிலத்தில் எழுதப்படுவது இல்லை’ என்று அவர் கூறி இருப்பது, அரசு அமைப்புச் சட்டத்திற்கு எதிரான அடக்குமுறைப் போக்கு ஆகும். எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மாநில மொழிகளையும், ஒட்டுமொத்தமாக ஒழித்துக் கட்டும் முயற்சியே ஆகும். தமிழ்நாட்டில், தமிழும், ஆங்கிலமும்தான் ஆட்சி மொழிகள் என, பேரறிஞர் அண்ணா சட்டம் இயற்றிப் பாதுகாப்பு அளித்தார்கள். அதனால்தான் இன்றைக்குத் தமிழ்நாட்டு இளைஞர்கள், ஆங்கிலம் நன்கு படித்து, உலகம் முழுமையும் வேலை வாய்ப்புகளைப் பெற்று முன்னேறி வருகின்றார்கள்.

ஆங்கிலம் படிக்காத வட இந்தியர்கள், தமிழ்நாட்டுக்கு வேலை தேடி வருகின்றார்கள். உலக நாடுகளின் பொதுப்பேரவை மற்றும் மனித உரிமைகள் மன்றத்தில், ஆறு மொழிகளில் அலுவல் நடைபெறுகின்றது. அதுபோல, இந்தியாவின் அரசு அமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் இடம்பெற்று உள்ள அனைத்து மொழிகளையும், இந்தியாவின் ஆட்சிமொழியாக அறிவிக்க வேண்டும். முதல் கட்டமாக, தமிழை இந்தியாவின் ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: