தற்கொலை செய்வதற்காக காவிரி ஆற்றில் குதித்த முதியவர்: உயிருடன் மீட்கப்பட்டார்

பள்ளிபாளையம்: ஈரோடு கே.எஸ்.நகரை சேர்ந்தவர் முருகேசன்(75). இவர் நேற்று காலை, பழைய காவிரி பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். திடீரென யாரும் எதிர்பாராத நேரத்தில் பாலத்தின் தடுப்பு சுவற்றில் ஏறி, காவிரி ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதை கவனித்த அங்கிருந்தவர்கள் அவரை தடுக்க சத்தமிட்டபடி ஓடிவந்தனர். ஆனால் அதற்குள் அவர் ஆற்றுக்குள் குதித்து விட்டார். நீச்சல் தெரிந்த காரணத்தால், அவரால் தண்ணீரில் மூழ்க முடியவில்லை. தண்ணீரில் மூழ்கவும் முடியாமல், மேலேறி வரவும் முடியாமல் தத்தளித்தார்.

இது குறித்த தகவலின் பேரில், அங்கு விரைந்து வந்த பள்ளிபாளையம் தீயணைப்பு வீரர்கள், ஆற்றில் குதித்து முதியவரை மீட்டு கரைக்கு தூக்கி வந்தனர். பின்னர், சிகிச்சைக்காக அவரை பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விசாரணையில், முருகேசன் எச்ஐவி நோயாளி என்பதும், நோயின் தாக்கம் காரணமாக அவர் தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்தது. சமீபகாலமாக காவிரி பாலத்திருந்து ஆற்றுக்குள் குதிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், பள்ளிபாளையம் பாலம் சூசைட் பாயிண்ட்டாக மாறி வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: