லக்கிம்பூரில் காரை ஏற்றி விவசாயிகள் படுகொலை; விசாரணைக் குழு அமைக்க உபி. அரசுக்கு 2 நாள் கெடு: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: லக்கிம்பூர் வன்முறை தொடர்பான விவகாரத்தில் உயர் நீதிமன்ற ஓய்வு நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரிப்பது குறித்து முடிவெடுக்க உபி அரசுக்கு உச்ச நீதிமன்றம் 2 நாள் கெடு விதித்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், லக்கிம்பூரில் கடந்த மாதம் ஒன்றிய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஸ் மிஸ்ராவின் கார் மோதி, 4 விவசாயிகள் கொல்லப்பட்டனர். விவசாயிகள் நடத்திய தாக்குதலில் பாஜ.வினர் 4 பேர் கொல்லப்பட்டனர். விவசாயிகள் படுகொலை தொடர்பாக ஆசிஷ் மிஸ்ரா உட்பட 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

விவசாயிகள் கொல்லப்பட்டது தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. மேலும், இந்த கொலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்யக்கோரி 2 வழக்கறிஞர்கள் தாக்கல் செய்த மனுக்களையும் அது விசாரிக்கிறது. கடந்த முறை இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்தபோது, ‘நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்ற பேரணியில், 23 பேர் மட்டும்தான் வன்முறையை நேரடியாக பார்த்தார்களா?’ இத்தனை நாட்கள் அவகாசம் கொடுத்தும் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை.

அதனால், இந்த சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்ற ஓய்வு நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரிக்க வேண்டும். அதற்கான உத்தரவை வெள்ளிக்கிழமை (நேற்று) பிறப்பிக்கப்படும்,’ என கூறிய நீதிபதிகள், வழக்கை ஒத்திவைத்தனர். இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, உபி அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், ‘ஓய்வு நீதிபதி தலைமையில் விசாரணை நடத்துவது தொடர்பாக முடிவெடுக்க 2 நாள் அவகாசம் வேண்டும்,’ என கோரப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, ‘இதுவரை கொடுத்த அவகாசத்தில் எதையும் செய்யவில்லை. 2 நாளில் என்ன முடிவெடுக்க போகிறீர்கள்?’ என கேட்டார். இருப்பினும், அரசின் கோரிக்கையை ஏற்பதாக தெரிவித்து வழக்கை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தார்.

Related Stories: