சோளிங்கர் அருகே மழை வெள்ளம் ஓடைக்கால்வாய் இடுப்பளவு தண்ணீரில் சடலத்தை எடுத்துச்சென்று அடக்கம்-தரைப்பாலம் அமைக்க மக்கள் கோரிக்கை

சோளிங்கர் :  சோளிங்கர் அருகே ஓடைக்கால்வாயில் இடுப்பளவு செல்லும் வெள்ளத்தில் சடலத்தை எடுத்துச்சென்று பொதுமக்கள் அடக்கம் செய்தனர். எனவே இந்த ஓடையின் குறுக்கே பாலம் அமைக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே உள்ள நந்திமங்கலம் கிராமத்தில் சுமார் 1,500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள ஏரியில் இருந்து உபரிநீர் செல்வதற்காக 2 ஓடைக்கால்வாய்கள் உள்ளது. அதில் ஒரு கால்வாய், சுடுகாட்டு பாதையின் குறுக்கிலும், மற்றொன்று கொடைக்கல் கிராமத்திற்கு செல்லும் சாலையின் குறுக்கிலும் உள்ளது. இவற்றின் வழியாக பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் கூலி தொழிலாளர்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் சென்று வருகின்றனர்.

இதேபோல் இறந்தவர்களின் சடலங்களை சுடுகாடு பாதை ஓடைக்கால்வாய் வழியாக கொண்டு சென்று அடக்கம் செய்கின்றனர். கடந்த மாதம் பெய்த தொடர் மழையின்போது ஏரி நிரம்பி சுடுகாட்டின் வழியாக உள்ள ஓடைக்கால்வாய் வழியாக உபரிநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. சூறை கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் ஓடை நீரில் விளையாடியபோது மூழ்கி உயிரிழந்தான்.

இந்நிலையில் வடகிழக்கு பருவமழை காரணமாக தற்போது மீண்டும் தொடர் மழை பெய்து அங்குள்ள ஏரியில் இருந்து அதிக அளவு உபரிநீர் ஓடைக்கால்வாய்கள் வழியாக வெளியேறி வருகிறது. அங்கு தரைப்பாலம் அமைக்கக்கோரி பொதுமக்கள் சார்பில் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இருப்பினும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது.

இந்நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த 50 வயது ஆண் ஒருவர், உடல் நலக்குறைவால் இறந்தார்.

அவரது சடலத்தை அடக்கம் செய்வதற்காக உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாலை ஓடைக்கால்வாய் வழியாக இடுப்பளவு தண்ணீரில் சடலத்துடன் இறங்கி கடந்து சென்று அடக்கம் செய்தனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது.

இதையறிந்த சோளிங்கர் எம்எல்ஏ முனிரத்தினம், ஒன்றியக்குழு தலைவர் கலைகுமார், மாவட்ட கவுன்சிலர் நாகராஜ், பிடிஓக்கள் அன்பரசு, ரவி, ஊராட்சி மன்ற தலைவர் கவிதா நரசிம்மன், ஒன்றிய  கவுன்சிலர் சரவணன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர்.

இதையடுத்து இந்த ஓடையின் குறுக்கே உடனடியாக பாலம் அமைப்பது தொடர்பாக ஆய்வு செய்தனர்.

Related Stories: