திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மலையப்ப சுவாமிக்கு 7 டன் பூக்களால் யாகம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மலையப்ப சுவாமிக்கு 7 டன் மலர்களால் புஷ்ப யாகம் நடந்தது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 15ம் நூற்றாண்டு முதல் புஷ்பயாகம் நடந்து வந்தது. காலப்போக்கில் புஷ்ப யாகம் நடத்துவது நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, கடந்த 1980ம் ஆண்டு முதல் புஷ்ப யாகம் மீண்டும் நடத்தப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் தெலுங்கு வருடத்தில் வரும் கார்த்திகை மாத ஸ்ரவண (திருவோணம்) நட்சத்திரத்தில் இந்த புஷ்ப யாகம் நடத்தப்படும். அதன்படி, கோயிலில் நேற்று புஷ்ப யாகம் நடந்தது. பாபவிநாசம் சாலையில் உள்ள தோட்டத்துறை அலுவலகத்தில் இருந்து, பல வண்ண மலர்கள் ஊர்வலமாக தோட்டத்துறை இயக்குனர் சினிவாசுலு தலைமையில் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது.

பின்னர் கோயிலில் உள்ள சம்பங்கி மண்டபம் என அழைக்கப்படும் கல்யாண மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு ஜீயர்கள் முன்னிலையில் பால், தயிர், இளநீர், சந்தனம் கொண்டு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து, வேத பண்டிதர்கள் சதுர்வேத பாராயணம் படிக்க சர்வ பூபால வாகனத்தில் எழுந்தருளிய ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு சாமந்தி, மல்லி,  முல்லை, தாழம்பூ, ரோஜா, தாமரை உள்ளிட்ட 14 வகையான மலர்களை கொண்டும் துளசி, மருவம், வில்வம் போன்ற இலைகள் என 7 டன் மலர்களை கொண்டு புஷ்ப யாகம் நடத்தப்பட்டது .  

புஷ்ப யாகத்தையொட்டி ஏழுமலையான் கோயில் உள்புறம், வெளிப்புறத்தில் பல்வேறு மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு இருந்தது. மேலும், புஷ்ப யாகத்தையொட்டி ஏழுமலையான் கோயிலில் நடைபெறக்கூடிய  கல்யாண உற்சவம், டோல் உற்சவம், ஆர்ஜித பிரமோற்சவம் ஆகிய ஆன்லைன் சேவைகள் ரத்து செய்யப்பட்டது.

Related Stories: