இந்தியாவில் முதன்முறையாக பொதுநிலையரான குமரியை சேர்ந்த அருளாளர் தேவசகாயத்துக்கு புனிதர் பட்டம்: மே 15ல் வாடிகனில் வழங்கப்படுகிறது

நாகர்கோவில்: இந்தியாவிலேயே  முதன்முறையாக பொதுநிலையரான, குமரியை சேர்ந்த அருளாளர் தேவசகாயத்திற்கு புனிதர் பட்டம் வரும் 2022 மே 15ம் தேதி வாடிகனில் வழங்கப்படுகிறது. குமரி மாவட்ட பகுதிகள் தென்திருவிதாங்கூருடன் இருந்தபோது மார்த்தாண்டம் அருகே நட்டாலம் கிராமத்தில் 1712 ஏப்ரல் 23ல் வாசுதேவன் நம்பூதிரி - தேவகியம்மா தம்பதிக்கு மகனாக பிறந்தவர் தேவசகாயம். இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் நீலகண்டன்.  அவரை நீலகண்ட பிள்ளை என்று அழைத்து வந்தனர். மன்னர் மார்த்தாண்ட வர்மாவின் அரண்மனையில் அலுவலராக பணியாற்றி வந்தார்.

பத்மநாபபுரம் அரண்மனை அருகே கல்குளம் நீலகண்டசுவாமி கோயில் அதிகாரியாகவும் இருந்தார். அவருக்கும் மேக்கோடு நாயர் குடும்பத்தை சேர்ந்த பார்கவிக்கும் திருமணம் நடைபெற்றது. 1741ல் திருவிதாங்கூர் படைகளுக்கும், டச்சு படைகளுக்கும் இடையே நடைபெற்ற போரில் மன்னர் மார்த்தாண்ட வர்மாவிடம் டச்சுப்படைத்தளபதி பெனடிக்ட் டிலனாய் போர் கைதியானார். மன்னரின் நம்பிக்கைக்குரியவராக விளங்கி டச்சு படைவீரர் டிலனாயுடன் நீலகண்டன் பழகினார்.  அவருடன் உரையாடியதில் இருந்து கத்தோலிக்க கிறிஸ்தவத்தை பற்றி அறிந்து கிறிஸ்தவத்தை தழுவினார்.

1745 மே 17ம் தேதி வடக்கன்குளம் திருக்குடும்ப ஆலயத்தில் திருமுழுக்கு பெற்றார். ‘‘லாசர்’’ என்ற விவிலிய பெயருடன் தமிழில் தேவசகாயம் என்று அழைக்கப்பட்டார். மனைவி பார்கவியும் திருமுழுக்கு பெற்று ‘‘தெரேஸ்’’ என்றும் தமிழில் ஞானப்பூ என்றும் அழைக்கப்பட்டார். அப்போது படை வீரர்களும் பலர் மனம் மாறினர். இதனால் உயர் குலத்தாரை புறக்கணித்தார் என்றும், மன்னரை அவமதித்து விட்டார் என்றும் அவரது கிறிஸ்தவ விசுவாசத்திற்காக 1752 ஜனவரி 14ம் தேதி மன்னரின் கட்டளைப்படி ஆரல்வாய்மொழி காற்றாடிமலையில் சுட்டு கொல்லப்பட்டார். அவரது உடல் பாறையில் இருந்து கீழே தள்ளி வன விலங்குகளுக்கு உணவாகப் போடப்பட்டது.  அவரின் எஞ்சிய உடல் பகுதிகள் சேகரிக்கப்பட்டு கோட்டார் புனித சவேரியார் ஆலயத்தில் பீடத்திற்கு முன்பு நல்லடக்கம் செய்யப்பட்டது.

இவருக்கு 22-12-2003 அன்று இறையூழியர் பட்டம் வழங்கப்பட்டது. 2012 டிசம்பர் 2ம்நாள், கார்மல் மேனிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியின் போது தேவசகாயம் பிள்ளை ‘‘மறைச்சாட்சி’’ என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். அப்போது அவருக்கு ‘‘முத்திப்பேறு பெற்றவர்’’ (அருளாளர்) என்னும் பட்டமும் அளிக்கப்பட்டது. இதையடுத்து தேவசகாயத்திற்கு புனிதர் பட்டம் வழங்க கோரிக்கை எழுந்தது. கடந்த 28-2-2019-ல் இவரை புனிதராக அறிவிக்கும் ஆவணத்தில் போப் பிரான்சிஸ் கையெழுத்திட்டார்.

தேவசகாயத்தை புனிதர் என்று அறிவித்த நிகழ்வு 2020 பிப்ரவரி 21ம் தேதி நடைபெற்ற போதிலும், அது எந்த தேதியில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் வரும் 2022 மே 15ம் தேதி அருளாளர் தேவசகாயத்திற்கு புனிதர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சி வாடிகனில் உள்ள செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் நடைபெறும் என்று நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இது தொடர்பான கடிதமும் குமரி மாவட்டம் கோட்டார் மறை மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அருளாளர் தேவசகாயம் இந்தியாவில் பிறந்து, இந்தியாவில் மறைசாட்சியாக அறிவிக்கப்பட்ட முதல் புனிதர் ஆவார். இந்திய திரு அவையில் முதல் பொதுநிலையினரான, இல்லறவாசியான புனிதர் ஆவார். தமிழகத்தில் முதல் புனிதர் ஆவார்.

Related Stories: