மலாலா திடீர் திருமணம்: இளம் வயதில் நோபல் பரிசு பெற்றவர்

லண்டன்: இளம் வயதிலேயே அமைதிக்கான நோபல் பரிசு வென்றவரும், பெண்கள் கல்விக்கான பாகிஸ்தான் செயல்பாட்டாளருமான மலாலா, இங்கிலாந்தில் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டார். பாகிஸ்தானில் பெண்கள் பள்ளிக்கு செல்வதை தடுக்க முயற்சித்த தலிபான்களை எதிர்த்து மலாலா போராட்டம் நடத்தியது சர்வதேச அங்கீகாரத்தை பெற்றது. கடந்த 2012ம் ஆண்டு தலிபான் தீவிரவாதிகளால் சுடப்பட்டு தலையில் காயமடைந்த இவர், லண்டனுக்கு எடுத்து செல்லப்பட்டு காப்பாற்றப்பட்டார்.

பெண் கல்விக்காக இவர் ஆற்றிய சேவைக்காக, தனது 17வது வயதிலேயே அமைதிக்கான நோபல் பரிசை பெற்றார். லண்டனில் தங்கி ஆக்ஸ்போர்டு பள்ளியில் பட்டப்படிப்பை முடித்தார். இந்நிலையில், 24 வயதான மலாலா டிவிட்டரில் தனது திருமணத்தை அறிவித்து சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். அதில், இளஞ்சிவப்பு உடை மற்றும் எளிமையான சில நகைகளுடன் அவர் காட்சி அளிக்கிறார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் உயர் பதவியில் உள்ள அசர் மாலிக்குடன், பர்மிங்காமில் உள்ள தனது வீட்டில் எளிமையான திருமண சடங்குகளை அவர் மேற்கொண்டார்.

பின்னர், குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்திருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். ‘இன்று எனது வாழ்க்கையில் ஒரு பொன்னான நாளை குறிக்கிறது. அசாரும் நானும் வாழ்க்கையின் பங்குதாரர்களாக வாழ்வில் இணைந்தோம். நாங்கள் எங்கள் குடும்பங்களுடன் பர்மிங்காமில் உள்ள வீட்டில் திருமண விழாவை எளிமையாக கொண்டாடினோம். தயவு செய்து உங்கள் பிரார்த்தனைகளை எங்களுக்கு அனுப்புங்கள். முன்னோக்கிச் செல்லும் பயணத்திற்காக நாங்கள் ஒன்றாகச் செல்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்,’ என டிவிட்டரில் மலாலா கூறியுள்ளார்.

Related Stories: