உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி லக்கிம்பூர் வழக்கு விசாரணையை கண்காணிக்க நீதிபதியை நியமிக்கலாமா?

புதுடெல்லி: லக்கிம்பூர் வழக்கு விசாரணை எதிர்பார்த்தபடி நடக்கவில்லை எனஅதிருப்தி தெரிவித்த உச்சநீதிமன்றம். இந்த வழக்கின் விசாரணையை ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கண்காணிப்பில் நடத்த பரிந்துரை செய்தது.

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில், ஒன்றிய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கான விவசாயிகள் பேரணி நடத்தினர். அப்போது, விவசாயிகள் மீது பாஜவினர் காரை ஏற்றினர். இதில் 4 விவசாயிகள் பலியாகினர்.

இதனிடையே, ஒன்றிய பாஜ அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா ஓட்டி வந்த காரே விவசாயிகள் மீது மோதியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக ஆசிஷ் மிஸ்ரா உள்ளிட்ட சிலரை போலீசார் கைது செய்தனர். இவ்விவகாரத்தில், இரு வழக்கறிஞர்கள் சார்பில் எழுதப்பட்ட கடிதத்தை அடிப்படையாகக் கொண்டு, உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வு முன் இவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் தங்கள் உத்தரவில், ‘‘லக்கிம்பூர் விவகாரம் தொடர்பான விசாரணையை உத்தரப்பிரதேச காவல்துறை தாமதமாக மேற்கொள்கிறது.

உத்தரப்பிரதேச அரசு இதுவரை கொடுத்துள்ள விசாரணை நிலவர அறிக்கையில் எதுவுமே இல்லை. குற்றம்சாட்டப்பட்டவர்களின் அலைபேசியை கூட இதுவரை போலீஸ் பறிமுதல் செய்ததாக தெரியவில்லை. 13 செல்போன்களில் ஒன்று மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டதாக கூறியுள்ளது. மாநில அரசின் அறிக்கை ஏற்றுக் கொள்ளும்படி இல்லை. சாட்சிகள் விசாரணை நிலுவையில் இல்லை என்பதை உறுதிசெய்ய உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதியை நியமிக்க உச்சநீதிமன்றம் பரிந்துரைக்கிறது. இதுதொடர்பாக வரும் வெள்ளிக்கிழமை நீதிமன்றம் உத்தரவை பிறப்பிக்கும்.

லக்கிம்பூர் கேரி சம்பவம் தொடர்பாக தொடரப்பட்ட 3 வழக்குகளில் சிறப்பு விசாரணை குழுவின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை. இது, காவல் துறை தாக்கல் செய்த அறிக்கையில் அப்பட்டமாக தெரிகிறது’’ என்றனர். மாநில அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘வழக்கு விசாரணை சரியான பாதையில் சென்று கொண்டுள்ளது. நீதிபதி நியமிப்பது தொடர்பான உச்சநீதிமன்றத்தின் கருத்தினை மாநில அரசிடம் தெரிவிக்கிறோம். அதன் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்பிக்கிறோம்’’ என்றார். இதையடுத்து வழக்கு வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Related Stories: