கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் இருந்து வெளியேறும் மழைநீர், கழிவுநீர் ஊருக்குள் புகுவதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியில் 5000க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள பெரும்பாலான மக்கள் தினக்கூலியாக வேலை பார்க்கின்றனர். வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த 4 நாட்களாக தொடர்ந்து கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்கிறது. இதனால் ஆங்காங்கே மழைநீர் குட்டைபோல் தேங்கி நிற்கிறது. ஊராட்சி நிர்வாகம் தொடர்ந்து மழைநீரை அகற்றி வருகிறது. புது கும்மிடிப்பூண்டி ஊராட்சியை ஓட்டி கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை உள்ளது.

இந்த தொழிற்பேட்டையில் இரும்பு உருக்கு ஆலைகள், ரசாயன உற்பத்தி செய்யும் பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த தொழிற்சாலைகளில் இருந்து ஏற்கனவே கால்வாய்களில் ரசாயனம் கழிவுநீர் விடுவது வழக்கமாகிவிட்டது. இதற்கிடையில், கனமழை காரணமாக மழையுடன், ரசாயன கழிவுநீரும் புது கும்மிடிப்பண்டி ஊராட்சிக்கு உட்பட்ட பாலகிருஷ்ணாபுரம், கோட்ரஸ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கழிவுநீர் மற்றும் மழைநீர் சேர்ந்து வீடுகளில் நேற்று முன்தினம் சூழ்ந்தது. இதுகுறித்து ஊராட்சி தலைவர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் மற்றும் மக்கள் சம்பந்தப்பட்ட சிப்காட் நிர்வாகத்திற்கு தொலைபேசி மூலமாகவும், கடிதம் வாயிலாகவும் புகார் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில், நேற்று மதியம் 12 மணிக்கு சிப்காட் தொழிற்பேட்டை நுழைவுவாயிலில் புதுகும்மிடிப்பூண்டியை சேர்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் சிப்காட் நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த கும்மிடிப்பூண்டி இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம் மற்றும் சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றதால் சிப்காட் தொழிற்பேட்டை திட்ட அலுவலர் சாய் லோகேஷ் மற்றும் வட்டாட்சியர் மகேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வாசுதேவன், நடராஜ், ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நேரில் ஆய்வு செய்தனர். பின்னர் சிப்காட் நிர்வாகம் மழைக்காலம் வரை மழைநீர் வெளியேற்றும் வகையில் தற்காலிக கால்வாய் அமைக்கப்படும், அத்தோடு சிப்காட்டில் இருந்து வெளியேற்றுவதற்காக சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு தரைப்பாலத்தை சுத்தம் செய்து தரப்படும் என உறுதியளித்தது. இதையேற்று சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Related Stories: