சேலம்-கரூர் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில் வரும் 15ம் தேதி முதல் இயக்கம்

சேலம்: சேலம்-கரூர் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில் வரும் 15ம் தேதி முதல் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் முக்கிய வழித்தடங்களில் ஏழை, நடுத்தர மக்கள் பயணிக்கும் வகையில் முன்பதிவில்லா பாசஞ்சர் ரயில்களை பழைய படி இயக்கத்திற்கு கொண்டு வர வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர். இதன்பேரில், தெற்கு ரயில்வே நிர்வாகம் 11 முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, சேலம் ரயில்வே கோட்டத்தில் கொரோனா ஊரடங்கின் காரணமாக நிறுத்தப்பட்ட சேலம்-கரூர் பாசஞ்சர் ரயில், எக்ஸ்பிரசாக மாற்றப்பட்டு வரும் 15ம் தேதி முதல் இயக்கத்திற்கு வருகிறது. சேலம்-கரூர் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் (06831, 06838) வாரத்திற்கு 6 நாட்கள் (ஞாயிறு தவிர) இயக்கப்படுகிறது.

சேலத்தில் காலை 6.40 மணிக்கு புறப்படும் இந்த ரயில், மல்லூருக்கு காலை 6.53க்கும், ராசிபுரத்திற்கு காலை 7.07க்கும், களங்காணிக்கு 7.21க்கும், நாமக்கல்லுக்கு 7.31க்கும், மோகனூருக்கு 7.49க்கும் சென்று, கரூரை காலை 8.20க்கு சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் கரூர்-சேலம் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில் (06838), கரூரில் இரவு 7.55 மணிக்கு புறப்பட்டு, மோகனூரில் இரவு 8.13க்கும், நாமக்கல்லுக்கு இரவு 8.29க்கும், களங்காணிக்கு இரவு 8.39க்கும், ராசிபுரத்திற்கு இரவு 8.49க்கும், மல்லூருக்கு இரவு 9.04க்கும் வந்து சேலத்தை இரவு 9.35 மணிக்கு வந்தடைகிறது. இதேபோல், சேலம் ரயில்வே கோட்டத்தில், கோவை-பழனி முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் (06463, 06462) வரும் 10ம் தேதி முதல் இயக்கத்திற்கு வருகிறது. கோவை-பொள்ளாச்சி முன்பதிவில்லா சிறப்பு ரயில் (06419, 06420) வாரத்திற்கு 6 நாட்கள் (சனிக்கிழமை தவிர) வரும் 13ம் தேதி முதல் இயக்கப்படுகிறது. இந்த ரயில்களை பயணிகள் பயன்படுத்திக் கொள்ள தெற்கு ரயில்வே நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

Related Stories: