மயிலாடும்பாறை-மல்லப்புரம் மலைச்சாலையில் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்-வாகன ஓட்டிகள் கோரிக்கை

வருசநாடு : மயிலாடும்பாறை-மல்லப்புரம் மலைச்சாலையில் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி-மதுரை மாவட்டங்களை இணைக்கும் சாலையாக மயிலாடும்பாறையிலிருந்து மல்லப்புரம் செல்லும் மலைச்சாலை உள்ளது. இந்த சாலையில் தினசரி நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதுதவிர பள்ளி, கல்லூரி மாணவர்கள் வாகனங்களில் சென்று வருகின்றனர்.

இந்நிலையில், மலைச்சாலையில் ஆங்காங்கே சாலையோர பள்ளங்கள் உள்ளன. இதனால், இரவு நேரங்களில் வரும் வாகனங்கள் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்குகின்றன. எனவே, மயிலாடும்பாறை-மல்லப்புரம் மலைச்சாலையை சீரமைத்து தடுப்புச்சுவர் கட்ட வருசநாடு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். மேலும், மயிலாடும்பாறை பகுதிகளில் விளையும் தக்காளி, அவரை, பீன்ஸ், கொத்தவரை, பூசணி ஆகிய விளை பொருட்களை உசிலம்பட்டி, பேரையூர், சிவகங்கை, திருநெல்வேலி ஆகிய ஊர்களுக்கு மலப்புரம் மலைச்சாலை வழியாக கொண்டு செல்கின்றனர். மலைச்சாலை குண்டும், குழியுமாக இருப்பதால், சந்தைகளுக்கு விளை பொருட்களை கொண்டு செல்ல முடியவில்லை என வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர். எனவே, மதுரை, தேனி மாவட்ட கலெக்டர்கள் இணைந்து மலைச்சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து வருசநாடு விவசாயிகள் கூறுகையில், ‘எங்கள் பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான வாகனங்கள் பேரையூர், மலப்புரம், பகுதிக்கு தினசரி சென்று வருகின்றன. மலைச்சாலை குண்டும், குழியுமாக தடுப்புச்சுவர் இல்லாமல் இருப்பதால், அடிக்கடி வாகனங்கள் கவிழ்ந்து விபத்து ஏற்படுகிறது. இது குறித்து தேனி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: