தேக்கடியில் படகு சவாரிக்கு திரளும் சுற்றுலாப் பயணிகள்

கூடலூர் : தீபாவளி பண்டிகை விடுமுறையால், தேக்கடியில் படகு சவாரிக்கு சுற்றுலாப் பயணிகள் குவிகின்றனர்.கேரளாவில் உள்ள சர்வதேச சுற்றுலாத்தலமான தேக்கடிக்கு, வெளிமாநிலங்கள் மற்றும் பல்வேறு நாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகின்றனர். தேக்கடியில் யானை சவாரி, டைகர் வியூ, நேச்சர் வாக், பார்டர் வாக், மூங்கில் படகு சவாரி என பல பொழுதுபோக்கு அம்சங்கள் இருந்தாலும், படகுச்சவாரி செல்லும்போது நீர்நிலைகளுக்கு தண்ணீர் அருந்த வரும் யானைகள், மான்கள், காட்டெருமை கூட்டங்கள் உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள், பல்வேறு வகை பறவையினங்களை மிக அருகில் காணமுடியும். இதனால், சுற்றுலாப்பயணிகள் படகுச்சவாரியையே அதிகம் விரும்புகின்றனர்.

தேக்கடி ஏரியில் கேரள சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் அம்மாநில வனத்துறை சார்பில் 6 படகுகள் சவாரிக்கு விடப்பட்டுள்ளன. தற்போது நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் பெரியாறு அணையின் நீர்மட்டம் 138 அடியை கடந்துள்ளது. இதனால், தேக்கடி ஏரி நிரம்பி படகுத்துறை வரை தண்ணீர் தேங்கியுள்ளது. இந்நிலையில், தீபாவளி பண்டி தொடர் விடுமுறையை முன்னிட்டு தேக்கடி ஏரியில் படகுச்சவாரி செல்ல சுற்றுலாப்பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் தேக்கடி படகுத்துறையில் நேற்றும் சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

Related Stories: