பரமத்திவேலூர் அருகே வெள்ளம் சூழ்ந்த பகுதியை கலெக்டர் நேரில் ஆய்வு-முட்டளவு தண்ணீரில் நடந்து சென்றார்

பரமத்திவேலூர் : பரமத்தி பேரூராட்சிக்கு உட்பட்ட காந்தி நகர், மரவபாளையம் பகுதியில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை, கலெக்டர் ஸ்ரேயா சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வெள்ள நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.நாமக்கல் மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. அதேபோல், காவிரியின் கிளை நதியான சேலம் திருமணிமுத்தாறு நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், திருமணிமுத்தாற்றில் பெருக்கெடுத்து வரும் தண்ணீர் வழி நெடுகிலும் உள்ள ஏரி, குளங்களை நிரப்பி, நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே உள்ள சுமார் 400 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடும்பன் குளம் ஏரியை வந்தடைந்தது. நாளுக்கு நாள் நீர்வரத்து அதிகரிப்பால் இடும்பன் குளம் ஏரி நிரம்பி மாறுகால் பாய்கிறது.

இதனால், கரையோரம் உள்ள பரமத்தி காந்தி நகர், மரவபாளையம் குடியிருப்பு பகுதியில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்தது. அப்பகுதியில் வசிப்பவர்களை வருவாய்த்துறையினர் மீட்டு சமுதாய கூடத்தில் தங்க வைத்துள்ளனர். தகவல் அறிந்த கலெக்டர் ஸ்ரேயா சிங் நேரில், முட்டளவு தண்ணீரில் நடந்து சென்று வெள்ளம் சூழ்ந்த பகுதியை பார்வையிட்டார்.

மேலும், தற்காலிக வெள்ள நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள 11 குடும்பங்களைச் சேர்ந்தவர்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து திருமணிமுத்தாறு ஆற்றின் குறுக்கே உள்ள பிள்ளைக்களத்தூர் தரைப்பாலம், பில்லூர் மற்றும் மேல்சாத்தம்பூர் பாலங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தாசில்தார் அப்பன்ராஜ், சித்ரா உள்ளிட்டோர்

உடனிருந்தனர்.

Related Stories: