திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தரிசனத்துக்கு இ-பாஸ் நடைமுறை அமலுக்கு வந்தது

* முன்பதிவு செய்யாத பக்தர்களுக்கும் அனுமதி * உள்ளூர் பக்தர்களுக்கு அடையாள அட்டை விநியோகம்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தீபத்திருவிழா வரும் 10ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. எனவே, கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காவும், கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தவும் ஆன்லைனில் முன்பதிவு செய்து இ-பாஸ் பெற வேண்டும் என்ற நடைமுறை நேற்று முதல் நடைமுறைக்கு வந்தது.

அதன்படி, நேற்று தொடங்கி வரும் 17ம் தேதி பகல் 1 மணி வரையும், 21ம் தேதி முதல் 23ம் தேதி வரையும் கோயிலில் தரிசனம் செய்ய இ-பாஸ் நடைமுறை அமலில் இருக்கும். மேலும், 17ம் தேதி பகல் 1 மணியில் இருந்து 20ம் தேதி வரை கோயிலில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாளொன்றுக்கு வெளி மாநில, மாவட்டத்தினர் 10 ஆயிரம் பேர் ஆன்லைனில் முன்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 3 ஆயிரம் பேருக்கு நேரடியாக அனுமதி அட்டை வழங்கப்பட்டது. ஆனால், புதிய நடைமுறை அமலுக்கு வந்த முதல் நாளான நேற்று ஆன்லைனில் 875 பேர் மட்டுமே முன்பதிவு செய்திருந்தனர்.

மேலும், இந்த கட்டுப்பாடு தெரியாத ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று கோயிலில் தரிசனம் செய்ய திரண்டனர். எனவே, இ-பாஸ் வைத்திருந்த பக்தர்கள் மட்டுமின்றி, ஆன்லைனில் முன்பதிவு செய்யாமல் பொது தரிசன வரிசையில் காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களையும் தரிசனம் செய்ய அனுமதித்தனர்.

மேலும், கோயிலுக்கு வரும் பக்தர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனரா? என்பதை கண்காணிக்கவும் முறையான ஏற்பாடுகள் செய்யவில்லை. அதன்படி, அண்ணாமலையார் கோயிலில் நேற்று ஆன்லைன் முன்பதிவு செய்யாத சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை தரிசனத்துக்கு தொடர்ச்சியாக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்களின் வருகை அதிகரித்திருந்ததால், மதிய நேரத்தில் கோயில் நடை அடைக்கும் நடைமுறை கைவிடப்பட்டது.

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் 3 ஆயிரம் பக்தர்கள் கோயிலில் தரிசனம் செய்ய அடையாள அட்டை வழங்கும் பணி நேற்று தொடங்கியது. கலெக்டர் அலுவலகம், ஆர்டிஓ அலுவலகம், நகராட்சி அலுவலகம் மற்றும் அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் அலுவலகங்களில் அடையாள அட்டை வழங்கப்பட்டது.

ஆதார் அட்டையின் நகல் அளித்த பொதுமக்களுக்கு, ஒருவருக்கு ஒரு அடையாள அட்டை வீதம் வழங்கினர். அனுமதி அட்டை வழங்கிய 4 மையங்களிலும் பொதுமக்களின் வருகை குறைவாகவே இருந்தது. இரண்டாவது நாளாக இன்றும் அடையாள அட்டை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: