சென்னை மாநகர பகுதியில் மழையால் சாலைகள் சேதமடைந்திருந்தால் பொதுமக்கள் புகார் அளிக்கலாம்: நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு

சென்னை: சென்னை மாநகர பகுதிகளில் மழையால் நெடுஞ்சாலைகள் சேதமடைந்திருந்தால் கோட்ட பொறியாளர், உதவி கோட்ட பொறியாளர், உதவி பொறியாளர் ஆகியோரின் செல்போன் எண்களில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்று நெடுஞ்சாலைத்துறை அறிவித்துள்ளது. சென்னை மாநகரில் நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஜிஎஸ்டி சாலை, வேளச்சேரி மெயின்ரோடு, மணலி நெடுஞ்சாலை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, கோயம்பேடு 100 அடி சாலை உட்பட 250 கி.மீ நீள சாலைகள் உள்ளன.

இந்த சாலைகள் மழையால் சேதமடைந்திருந்தாலோ, போக்குவரத்து தடை ஏற்பட்டிருந்தாலோ அவற்றை உடனுக்குடன் சரி செய்யும் வகையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சைதாப்பேட்டையில் உள்ள கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. இந்த அறைக்கு வரும் புகாரின் பேரில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில், மழையால் நெடுஞ்சாலைகள் சேதமடைந்திருந்தாலோ, போக்குவரத்து தடை ஏற்பட்டிருந்தாலோ பொதுமக்கள் புகார் அளிக்கும் வகையில் கோட்ட பொறியாளர், உதவி கோட்ட பொறியாளர், உதவி பொறியாளர் ஆகியோரின் செல்போன் எண்களை நெடுஞ்சாலைத்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை முதன்மை செயலாளர் தீரஜ் குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னையில் பருவமழை மற்றும் பேரிடர் காலங்களில், நெடுஞ்சாலைத் துறை தொடர்பாக புகார் தெரிவிக்க, கோட்டப் பொறியாளர்- 94431 32839, உதவிக் கோட்டப் பொறியாளர்-70101 05959 (சென்னை மாநகர சாலைகள்) உதவிக் கோட்டப் பொறியாளர் - 94433 28377 (தாம்பரம்) ஆகிய எண்களில் பொதுமக்கள் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: