கருணை காட்ட முடியாது தெரிந்தே செய்த குற்றம் தூக்கு தண்டனை உறுதி: சிங்கப்பூர் அரசு விளக்கம்

சிங்கப்பூர்: ‘தெரிந்தே போதை பொருளை கடத்தியதால், மலேசிய வாழ் இந்திய வாலிபரின்  தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும்,’ என்று சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது. மலேசியா வாழ் இந்தியர் நாகேந்திரன் தர்மலிங்கம், கடந்த 2009ம் ஆண்டு சிங்கப்பூருக்கு 42.72 கிராம் ஹெராயின் கடத்தியதாக கைதானார். இவர் தனது கடனை அடைப்பதற்காக இதை செய்ததாக கூறினார். இந்த குற்றத்துக்காக கடந்த 2010ம் ஆண்டு நவம்பரில் இவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. உயர் நீதிமன்றம், சிங்கப்பூர் மேல்முறையீட்டு நீதிமன்றமும் இதை உறுதி செய்தன. இதனால், வரும் 10ம் தேதி சாங்கி சிறையில் இவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.

ஆனால், மனநிலை பாதிப்பால் தெரியாமல் செய்த குற்றத்துக்காக அவரை மன்னிக்கும்படி மனித உரிமை ஆர்வலர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என 40 ஆயிரம் பேர் கையெழுத்திட்டு, இவரது தண்டனையை நிறுத்தும்படி சிங்கப்பூர் அரசை வலியுறுத்தி உள்ளனர். உலகளவில் இந்த கோரிக்கை வலுத்து வருகிறது. இந்நிலையில், சிங்கப்பூர் உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘நாகேந்திரன் தெரிந்தேதான் போதை பொருளை கடத்தியுள்ளார். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் அல்ல என்பது, மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். எனவே, அவருடைய தண்டனை நிறைவேற்றப்படும்,’ என்று கூறப்பட்டுள்ளது.

* 15 கிராம் ஹெராயின் கடத்தினாலும் தூக்கு

இந்தியா உட்பட பல நாடுகளில் டன் கணக்கிலும் ஹெராயின் கடத்தப்படுகிறது. இதில் சிக்குபவர்கள் ஒரு சில மாதங்களில் ஜாமீனில் வெளியே வந்து விடுகின்றனர். ஆனால், சிங்கப்பூரில் போதை பொருள் கடத்தல் மிகப்பெரிய குற்றம். இங்கு, 15 கிராம் ஹெராயின் கடத்தி சிக்கினாலே தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது.

Related Stories: