வடமலைக்குறிச்சி ரோடு பகுதியில் ‘ராங்சைடால்’ தொடரும் விபத்துகள்-நான்குவழிச்சாலையில் சர்வீஸ் ரோடு அமைக்க கோரிக்கை

விருதுநகர் : மதுரையிலிருந்து விருதுநகர் வழி கன்னியாகுமரி நான்குவழிச்சாலை போடப்பட்டு சுமார் 12 ஆண்டுகளாகிறது. விருதுநகர் நுழைவு பகுதி வழி செல்லும் நான்குவழிச்சாலையில் புல்லக்கோட்டை ரோட்டில் இருந்து பாவாலி சாலை வரை சுமார் ஒரு கி.மீ தூரத்திற்கு இருபுறமும் சர்வீஸ் ரோடு இல்லை.

கவுசிகா ஆறு செல்லும் வழித்தடத்தில் சர்வீஸ் ரோடு போடாமல் விடுபட்டதால் வடமலைக்குறிச்சி ரோட்டில் உள்ள கலைஞர் நகர் மேட்டுத்தெரு, சின்னமூப்பன்பட்டி, சிவஞானபுரம், பாப்பாகுடி, நந்திரெட்டியபட்டி, வடமலைக்குறிச்சி கிராமங்களில் வசிக்கும் 15 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் விருதுநகர் வந்து செல்ல சர்வீஸ் ரோடு இல்லாததால் நான்குவழிச்சாலையில் எதிர்புறம் வந்து செல்கின்றனர்.இப்பகுதியில் நடந்து செல்லும் ஆண்களும், பெண்களும் நான்குவழிச்சாலை தடுப்புகள் மேல் ஏறி தாண்டி ஆபத்தான முறையில் கடக்கின்றனர். மேலும் கவுசிகா ஆற்றுப்பாலத்தின் கீழ்பகுதி வழியாக டூவீலர்களில் ஆபத்தான முறையில் கடந்து செல்கின்றனர்.

நான்குவழிச்சாலையில் எதிர்புறம் செல்வதால் விபத்துக்களால் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து, இருநூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். நான்குவழிச்சாலைகளில் டோல்கேட் அமைத்து கொள்ளை வசூல் நடத்தும் நான்குவழிச்சாலை தேசிய ஆணையம் விருதுநகரில் புல்லாக்கோட்டை ரோடு முதல் பாவாலி ரோடு வரையிலான ஒரு கி.மீ தூரத்திற்கு இருபுறமும் சர்வீஸ் ரோடு அமைத்திட வேண்டுமென சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories: