அமராவதி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை செட்டிப்பாளையம் தடுப்பணையில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர்

கரூர் : அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் கரூர் செட்டிப்பாளையம் தடுப்பணையில் அதிகளவு தண்ணீர் வந்து கொண்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அமராவதி அணை உள்ளது. இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த மழையின் காரணமாக அணையின் நீர் மட்டம் உயர்ந்து, தற்போது அணையில் இருந்து 2234 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

அணையில் தண்ணீர் திறந்து விடப்பட்டதோடு, கரூர் மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருவதால் தற்போது அமராவதி ஆற்றில் தண்ணீர் வந்து கொண்டுள்ளது. இந்நிலையில், கரூர் மாவட்டம் செட்டிப்பாளையம் அருகே அமராவதி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

இந்த அணையில் இருந்து கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் மற்றும் பாசன வசதிக்காக வாய்க்கால்கள் செல்கிறது. தற்போது செட்டிப்பாளையம் தடுப்பணையின் வழியாக அதிகளவு தண்ணீர் வந்து கொண்டுள்ளதால், கிளை வாய்க்கால்களிலும் தண்ணீர் சென்று வருகிறது.தடுப்பணையில் தண்ணீர் வரத்து காரணமாக, இந்த பகுதி முழுதும் ரம்மியமாக காணப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories: