தொடர் மழையால் குந்தா அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு : மின் உற்பத்தி தீவிரம்

மஞ்சூர் :  தொடர் மழையால் குந்தா அணைக்கு நீர் வரத்து அதிகரித்ததை தொடர்ந்து கெத்தை, பரளி மின் நிலையங்களில் மின்சார உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 12நீர் மின் நிலையங்கள் இயங்கி வருகிறது. அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு, பைக்காரா, போர்த்திமந்து உள்பட பல்வேறு அணைகளில் தேக்கி வைக்கப்படும் நீரின் மூலம் மேற்படி மின் நிலையங்களில் மின்சாரம் உற்பத்தி செய்யப் படுகிறது. இதில் குந்தா-60 மெகாவாட், கெத்தை-175, பரளி-180, பில்லுார்-100, அவலாஞ்சி-40, காட்டுகுப்பை-30, சிங்காரா-150, பைக்காரா-59.2, பைக்காராமைக்ரோ-2, முக்குருத்திமைக்ரோ-0.70, மாயார்-36, மரவகண்டி-0.75, என மொத்தம் 833.65 மெகாவாட் மின்சாரம்  தயாரிக்கப்படுகிறது.

மேலும் மின் நிலையங்களில் மின்சார உற்பத்திக்கு பின் ெவளியேற்றப்படும் தண்ணீரானது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதுடன் கோவை, ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கிய பவானி பாசனப்படுகை விவசாய நிலங்களின் முக்கிய நீராதாரமாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் குந்தா, ஊட்டி, குன்னுார் உள்பட மாவட்டம் முழுவதும் கடந்த சில தினங்களாக பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

இதனால் ஆறுகள், சிற்றோடைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் பெரும்பாலான அணைகளுக்கும் நீர் வரத்து அதிகரித்து வருகிறது. மஞ்சூர் சுற்றுபுற பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால் குந்தா அணையின் நீர் மட்டம் பெருமளவு உயர்ந்துள்ளது. அணையின் மொத்த கொள்ளளவான 89 அடியில் தற்போது 88 அடி வரை நீர் மட்டம் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து குந்தா அணையில் அமைந்துள்ள சுரங்கபாதை வழியாக கெத்தை மின் நிலையத்திற்கு கொண்டு செல்லும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டு கெத்தை மின் நிலையத்தில் கூடுதல் மின்சார உற்பத்தி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து குந்தா புனல் உற்பத்தி வட்ட மேற்பார்வை பொறியாளர் (பொறுப்பு) பிரேம்குமார் கூறியதாவது: நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் குந்தா அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன் மூலம் அணைக்கு வரும் நீரை உபயோகப்படுத்தி குந்தா மின் நிலையம் 2 (கெத்தை), குந்தா மின் நிலையம் 3 (பரளி) ஆகியவற்றில் மின்சார உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது, என தெரிவித்தார்.

Related Stories: