ஸ்ரீநகர் - சார்ஜா விமானத்துக்கு விதித்த தடையை நீக்க வேண்டும்: பாகிஸ்தானுக்கு இந்தியா வேண்டுகோள்

புதுடெல்லி: ஸ்ரீநகர் - சார்ஜா நேரடி விமானம் தனது வான் வழியாக பறக்க தடை விதித்திருப்பதை மறுபரிசீலனை செய்யும்படி பாகிஸ்தானுக்கு இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில்  ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த மாதம் 4 நாட்கள் பயணம் மேற்கொண்டார். அப்போது, ஸ்ரீநகரில் இருந்து வளைகுடா நாடான சார்ஜாவுக்கு நேரடி விமான போக்குவரத்தை தொடங்கி வைத்தார். ‘கோ பர்ஸ்ட்’ விமான நிறுவனம், இந்த விமானத்தை இயக்குகிறது. கடந்த மாதம் 23, 24, 26 மற்றும் 30ம் தேதிகளில் இந்த விமானம், பாகிஸ்தான் வான் எல்லை  வழியாக இயக்கப்பட்டது.

ஆனால், கடந்த புதன் கிழமை இந்த விமானம் தனது வான் எல்லை வழியாக பறப்பதற்கு பாகிஸ்தான் திடீரென தடை விதித்தது. இதனால், இந்த விமானம் தற்போது பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் வழியாக சென்று, பிறகு அரபிக் கடல் வழியாக சார்ஜா சென்று கொண்டிருக்கிறது. இதனால், கூடுதலாக ஒரு மணி நேரம் பறக்க வேண்டியுள்ளது. இதனால், எரிபொருள் செலவு அதிகமாவதால், பயணிகள் கட்டணமும் அதிகமாகிறது. எனவே, ‘இது மக்கள் பயன்படுத்தும் விமானம் என்பதால், அதற்கு விதித்த தடையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்,’ என்று பாகிஸ்தானுக்கு ஒன்றிய வெளியுறவு அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது பற்றி பாகிஸ்தான் வெளியுறவு துறை தகவல் தொடர்பாளர் ஆசிம் இப்திகார் கூறுகையில், ‘‘பல்வேறு தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக, இந்த தடையை பாகிஸ்தான் விமான போக்குவரத்து இயக்குனரகம் விதித்து இருக்கலாம்.,’’ என்றார்.

* பாகிஸ்தான் வான் எல்லை வழியாக பறக்க தடை விதித்துள்ள போதிலும், ஸ்ரீநகர் - சர்ஜா விமானத்தை ஒருநாள் விட்டு ஒருநாள் இயக்க, கோ பர்ஸ்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

* ஸ்ரீநகர்- துபாய் இடையே இயக்கப்பட்ட நேரடி விமானத்துக்கும்  2009ல் இதே போல் பாகிஸ்தான் தடை விதித்ததால், அந்த விமானம் நிறுத்தப்பட்டது.

Related Stories: