வால்பாறையில் தொடர் மழை எதிரொலி சாலையில் உருண்டு விழுந்த ராட்சத பாறை

வால்பாறை: பருவமழை தீவிரமடைந்ததன் எதிரொலியாக வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் பாறைகள் பிடிப்பு தன்மை இழந்து சாலைகளில் விழும் நிலை தொடர்வது தொடர்ந்து வருகிறது. நேற்று 8வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் ராட்சத பாறை ஒன்று உருண்டு விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வால்பாறை-பொள்ளாச்சி இடையே மலைப்பாதையின் இரு புறங்களிலும் மரங்கள், புதர்கள், பாறைகள் உள்ளது. பொள்ளாச்சியில் இருந்து வால்பாறைக்கு செல்லும் ஆழியாறு வனத்துறை சோதனைச் சாவடியில் இருந்து தொடங்கி, வால்பாறை நகர் பகுதி வரை 40 கிமீ.  தொலைவில் 40க்கும் மேற்பட்ட கொண்டை ஊசி வளைவுகள் உள்ளது.  மலைச்சாலை கவியருவி பகுதியில் இருந்து சாலையின் இருபுறத்திலும் புதர்கள் ஆக்கிரமித்து உள்ளது.

இந்நிலையில் பாறை மிகுந்த பகுதிகளில் மண் பிடிப்பு தன்மை இழந்து வருகிறது. 8வது கொண்டை ஊசி பகுதியில் நேற்று விழுந்த பாறையை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஜேசிபி வாகனங்கள் கொண்டு அப்புறப்படுத்தினர்.  பாறைகளை விழுவதற்கு காரணங்கள் குறித்து புவியியல் சார்ந்த ஆய்வு செய்து, ஊட்டி மலை வழிச்சாலை போல மாறுவதற்கு முன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.  

வால்பாறை சாலை விரிவாக்கம், சாலை ஓரங்களில் நிலத்தில் தண்ணீர் புகாமல் இருக்க கான்கிரீட் தளம் அமைப்பது, சாலை மேம்பாட்டிற்காக சாலைக்கு மேல் பல வருடங்களாக சாலை அமைக்கப்படுவதால் எடை தாங்காமல் இருக்கலாம் என கூறப்படுகிறது. எனவே இது குறித்து அதிகாரிகள் சிறப்பு ஐஐடி குழுவினர் கொண்டு ஆய்வு செய்து, எதிர்வரும் காலங்களில் சாலைக்கு மேல் சாலை அமைக்காமல், பக்கவாட்டில் இயந்திரங்கள் கொண்டு விரிவாக்கம் செய்யாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பூகோள வியலாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Related Stories: