கொரோனா, துணை நோயை தடுக்கும் பைசர் பூஸ்டர் டோஸ்: லான்செட் ஆய்வு அறிக்கை தகவல்

பாஸ்டன்: கொரோனா மற்றும் அதன் துணை நோயின் விளைவுகளை குறைப்பதில் பைசர் பூஸ்டர் டோஸ் முக்கிய பங்காற்றுவதாக லான்செட் மருத்துவ இதழ் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. உலகம் முழுவதும் கடந்த 2 ஆண்டாக கொரோனா கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு நிறுவனங்கள் தடுப்பூசியை கண்டுபிடித்தன. இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு, அமெரிக்காவில் பைசர், அஸ்ட்ராஜெனிகா உள்ளிட்ட தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டன. தடுப்பூசி இரண்டு டோஸ் செலுத்திக்கொண்டவர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு இருப்பதால் பாதிப்பு ஏற்படுகிறது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், இஸ்ரேலில், கொரோனா நான்காவது அலை உச்சமடைந்த நிலையில், உருமாறிய டெல்டா வைரசும் அங்கு ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தது. இந்த நேரத்தில், கிளாலிட் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அங்கு  பைசர் பூஸ்டர் 3வது டோஸை மக்களுக்கு செலுத்தி ஆய்வு மேற்கொண்டனர். பைசர்-பயோஎன்டெக் எம்ஆர்என்ஏ கோவிட்-19 தடுப்பூசியின் மூன்றாவது டோஸின் செயல்திறன் கடுமையான நோய்களுக்கு எதிராக நன்கு பயனளித்தது. லான்செட்டில் வெளியான ஆய்வறிக்கையில், ‘பைசர் பூஸ்டர் டோசின் நிஜ உலக ஆய்வின்படி, ஐந்து மாதங்களுக்கு முன்பு இரண்டு டோஸ்களை செலுத்திக்கொண்டவர்களுடன் ஒப்பிடும் போது மூன்றாவது பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொண்டவர்கள் கடுமையான நோய் விளைவுகளில் இருந்து பாதுகாக்கப்பட்டனர்.

2021ம் ஆண்டு ஜூலை 30 முதல் செப்.23 வரை இஸ்ரேலில் நான்காவது அலை உச்சத்தில் இருந்த போது பலர் உருமாறிய டெல்டா வைரசாலும் பாதிப்படைந்தனர். அப்போது, ஆராய்ச்சியாளர்கள் 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் மொத்தம் 7,28,321 பேருக்கு பைசர் தடுப்பூசி மூன்றாவது பூஸ்டர் டோஸை செலுத்தி ஆய்வு மேற்கொண்டனர். பைசர் தடுப்பூசி இரண்டு டோஸ்களை ஐந்து மாதத்துக்கு முன்பு செலுத்திகொண்டவர்களையும் இவர்களையும் ஒப்பிட்டு பார்க்க தனித்தனி குழு அமைக்கப்பட்டது. இதில், ஐந்து மாதத்துக்கு முன்பு 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களை விட 3 டோஸ் செலுத்திக்கொண்டவர்களில் 93 சதவீதத்தினர் கொரோனா பாதிப்பில்லாமல் இருந்தனர்.

92 சதவீதத்தினர்  கடுமையான நோய் விளைவுகளால் பாதிக்காமல் இருந்தனர். 81 சதவீதத்தினர் உயிரிழப்பில் இருந்து மீண்டனர். ஒவ்வொரு வயதினருக்கும்  3வது டோஸ் எடுத்துக்கொண்ட 8 நாளில் நோயின் தாக்கம் குறைவதாக தெரியவந்துள்ளது. இதனால் கொரோனாவால் ஏற்படும் பாதிப்பு மற்றும் அதிலிருந்து மீண்ட பிறகு ஏற்படும் கடும் விளைவுகள் குறைகிறது’ என்று இஸ்ரேல் கிளாலிட் ஆராய்ச்சி நிறுவன பேராசிரியர் ரான் பாலிசர் தெரிவித்தார். மூன்றாவது டோஸ் பூஸ்டர் போடாதவர்களுக்கு இந்த ஆய்வறிக்கை உதவியாக இருக்கும் என்று நம்புவதாக ஹார்வர்டு மருத்துவ பள்ளி பேராசிரியர் பென் ரெய்ஸ் கூறினார்.

Related Stories: