விசிக, பாமகவினர் ஆர்ப்பாட்டம்

திருக்கழுக்குன்றம்: தண்டரை கிராமத்தில் சிட்கோ அமைப்பதற்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 44 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிட்கோவிற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் உள்ள சில பள்ளமான பகுதியை சமன்படுத்த அங்குள்ள  வனப்பகுதிக்கு ஒட்டிய பகுதியில் உள்ள மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் சில தினங்களுக்கு முன்பு மண் எடுக்க ஆரம்பித்தனர். இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.  இதனால் சில தினங்கள் மண் எடுக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

மீண்டும் நேற்று  லாரிகள், பொக்லைன் இயந்திரம் மூலம் ஏற்கெனவே பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் இடத்தில் மண் அள்ளினர். இதனையறிந்த அப்பகுதியை சேர்ந்த விசிக மற்றும் பாமகவினர் மற்றும் பொதுமக்கள் என 100க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து மண் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். தகவலறிந்த திருப்போரூர் தாசில்தார் ராஜன், திருக்கழுக்குன்றம் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் பேச்சு வார்த்தை நடத்தினர்.    பொதுமக்கள் கருத்துக் கேட்புக்கு பின்னரே உரிய முடிவு எடுக்கப்படும். அதுவரை மண் எடுக்கப்பட மாட்டாது என்று உறுதியளித்ததின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Stories: