தினமும் 10,000 பக்தர்களுக்கு அனுமதி திருச்செந்தூரில் கந்த சஷ்டி திருவிழா இன்று தொடக்கம்: 9ம் தேதி சூரசம்ஹாரம்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் கந்தசஷ்டி திருவிழா இன்று காலை யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது. இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 7.35 மணிக்கு யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி திருவிழா துவங்குகிறது. காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், பகல் 12 மணிக்கு யாகசாலையில் சுவாமிக்கு  தீபாராதனை நடக்கிறது. பின்னர் மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை  நடக்கிறது. தொடர்ந்து கோயில் உட்பிரகாரத்திலுள்ள 108 மகாதேவர் சன்னதி முன்பு எழுந்தருளும் ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானைக்கு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடக்கிறது.

6ம் நாளையொட்டி வரும் 9ம் தேதி அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30  மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 9 மணிக்கு உச்சிக்கால அபிஷேகத்தை தொடர்ந்து தீபாராதனை நடக்கிறது. மதியம் 1 மணிக்கு மாலை சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு மேல் சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருள்கிறார். பின்னர் கோயில் வளாகத்தில் சுவாமி ஜெயந்திநாதர், ஆணவம், கண்மம், மாயை ரூபமாக விளங்கும் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. கந்தசஷ்டி திருவிழாவுக்கு இன்று முதல் வருகிற 8ம்தேதி வரை தினமும் ஆன்லைன் மூலம் 5 ஆயிரம் பேரும், நேரடியாக வருபவர்கள் 5 ஆயிரம் பேரும் என 10 ஆயிரம் பேருக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது. முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம், 10ம் தேதி நடைபெறும் திருக்கல்யாண வைபவத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

Related Stories: