திருவெறும்பூர் அருகே கிளியூர் ஊராட்சியில் தொடர் மழையால் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கின

திருவெறும்பூர் : திருவெறும்பூர் பகுதிகளில் தொடர் மழையால் கிளியூர் ஊராட்சியில் சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவெறும்பூர் சுற்று வட்டார பகுதியிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தற்போது நடவு செய்யப்பட்டுள்ள சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளது.

அதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் அருகே கிளியூரில் நடவு செய்யப்பட்டுள்ள சம்பா நெற்பயிர்கள் சுமார் 75 ஏக்கர் வயல்கள் மழை நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விவசாய சங்க தலைவர் சங்கிலிமுத்து கூறுகையில், கடந்த ஒரு மாதத்தில் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.15 ஆயிரம் வரை செலவு செய்து சம்பா நாற்று நடவு செய்யப்பட்டுள்ளது. தற்போது தொடர் மழையின் காரணமாக எங்கள் பகுதியில் சம்பா நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கிக் கிடக்கின்றன.

மழை இல்லாமல் இருந்தால் 2 நாளில் இந்த தண்ணீர் வடியத் தொடங்கும். அப்படி இருந்தால் பயிர்களை ஓரளவுக்கு காப்பாற்றலாம் இல்லை என்றால் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகும். விவசாயிகளுக்கு பேரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது என்று வேதனையுடன் தெரிவித்தார். மேலும் வருவாய்த் துறையினரும் வேளாண் அதிகாரிகளும் வயல்வெளிகளை வந்து பார்த்து சென்றதாகவும் கூறினார்.

Related Stories: