வேலூர் அருகே சதுப்பேரி கோடிபோனது கால்வாய்கள் ஆக்கிரமிப்பால் ஊருக்குள் புகுந்த வெள்ளம்-பொதுமக்கள் அவதி

வேலூர் : வேலூரில் சதுப்பேரி உபரி நீர் வெளியேற்றப்படும் கால்வாய்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் ஊருக்குள் நீர் புகுந்துள்ளதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை கொட்டியது. தற்போது வடகிழக்கு பருவமழையும் பெய்து வருகிறது. வேலூர் மாவட்டத்திலும் மழை பெய்தது. இதனால் மாவட்டத்தில் உள்ள முக்கிய நீர்நிலைகள் நிரம்பியது.

வேலூர் மாநகரம் மற்றும் 20க்கும் மேற்பட்ட கிராம மக்களின் நிலத்தடி நீராதாரமாக சதுப்பேரி விளங்கி வருகிறது. 621 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட இந்த ஏரிக்கு விரிஞ்சிபுரம் பாலாற்றில் இருந்து அப்துல்லாபுரம் வழியாக கால்வாய் மூலம் தண்ணீர் திருப்பிவிடப்பட்டது. இனால் சதுப்பேரி கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேகமாக நிரம்பியது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இருப்பினும் சதுப்பேரியின் மறுபுறம் சதுப்பேரி கிராமத்திலும் ஏரியின் ஒரு பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. ஏரிக்கரையையும் விட்டு வைக்காமல் ஆக்கிரமிப்பாளர்கள் கட்டிடங்களை கட்டியுள்ளனர். நாலாபுறமும் சதுப்பேரி 200 ஏக்கர் பரப்பளவுக்கும் மேல் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளது. கழிவுநீரும் பல்வேறு வழிகளில் ஏரியில் கலக்கிறது. திறந்த வெளி கழிப்பிடமாகவும் உள்ளது.

இந்நிலையில் சதுப்பேரியில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படும் கால்வாய் பகுதிகள் பெரும்பாலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் நீர் வெளியே செல்ல முடியாமல் கொணவட்டம் நேதாஜி தெருவில் குடியிருப்புகள் வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது: கால்வாய் ஆக்கிரமிப்பு மட்டுமின்றி சதுப்பேரி ஏரி நீர்தேங்கும் பகுதியிலும் கட்டிடங்கள் கட்டி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு அடுக்கு கட்டியிருந்த ஆக்கிரமிப்பு கட்டிடத்தை அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் தற்போது பெரிய கட்டிடங்களாக கட்டப்பட்டுள்ளது. மேலும் தோல் கழிவுகள் கொட்டும் இடமாகவும் மாறியுள்ளது.

இதனை கண்காணிக்க வேண்டிய பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் தொடர்ந்து ஏரி முழுவதும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகிறது. எனவே 20 கிராம மக்களின் நிலத்தடி நீராதாரமாக விளங்கும் சதுப்பேரியின் நீர்வரத்துக்கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், ஏரியில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழிந்தோடும் நீரை திடீர் நகர், முள்ளிப்பாளையம்சிறு ஏரிகளுக்கு திருப்பிவிடும் வகையில் இருந்த இணைப்புக்கால்வாய்கள் இன்று காணாமல் போயுள்ளன.

கொணவட்டம் ஊரின் மத்தியில் செல்லும் இந்த கால்வாய் தற்போது தெருவாக உருமாறியுள்ளது. இந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அனைத்தும் பக்காவாக அரசியல்வாதிகளால் கபளீகரம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளதுடன், பட்டா, மின்இணைப்பு, குடிநீர் இணைப்பு என வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆற்றுக்கு செல்லும் இணைப்புக்கால்வாயும் காணாமல் போயுள்ளது. இதை மீட்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: